தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகில் தாமிரபரணி ஆற்றையொட்டி அமைந்திருக்கும் மேலாத்தூர் – சொக்கப்பழங்கரை ஊராட்சியில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அப்பகுதி மக்களிடம் வெள்ள பாதிப்புகள் குறித்துக் கேட்டறிந்தார். கிராமத்தில் வசித்து வரும் மக்கள் வெள்ளத்தால் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து உள்ளதாகத் தெரிவித்தனர். இந்த கிராமத்தில் சுமார் 250 குடும்பங்கள் இருக்கும் நிலையில் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
சொக்கப்பழங்கரை கிராமத்தில் வெள்ள பாதிப்பை ஆய்வு செய்யும் பொது, கண் பார்வை குறைபாடுள்ள சிறுமியைக் கண்ட கனிமொழி, அந்த சிறுமியிடம் சென்று விசாரித்தார். அதற்கு அந்த சிறுமி, தனது பெயர் ரேவதி என்றும் ஏழாம் வகுப்பு படித்து வருவதாகவும், தனக்கு கண் பார்வை பிரச்சனை இருப்பதாகவும். அதற்கு மருத்துவச் சிகிச்சை வேண்டும் என்று கனிமொழி எம்.பியிடம் கூறினார். உடனடியாக, கண் மருத்துவச் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வதாகக் கனிமொழி எம்.பி மாணவிக்கு உறுதியளித்தார்.

