தூத்துக்குடி
ஒன்றிய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னிலையில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த அதிக கனமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பு குறித்து அரசு உயர் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
மாநகராட்சிக்குட்பட்ட குறிஞ்சிநகர் பகுதியையும், அதிக கனமழை காரணமாகவும், தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட பெறும் வெள்ளம் காரணமாகவும் உடைப்பு ஏற்பட்ட கோரம்பள்ளம் கண்மாயினையும், மறவன்மடம் ஊராட்சி அந்தோனியார்புரத்தில் சேதமடைந்த பாலத்தினையும் பார்வையிட்டு பொதுமக்களிடம் வெள்ள சேதங்கள் குறித்தும் கேட்டறிந்தார்கள்.
மேலும், முறப்பநாடு கோவில்பத்து கிராமத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கட்டு;ப்பாட்டில் உள்ள குடிநீர் நீரேற்று நிலையத்தில் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து பார்வையிட்டு, பின்னர் அப்பகுதி மக்களிடம் வெள்ள சேத விபரங்கள் குறித்து கேட்டறிந்தார். ஸ்ரீவைகுண்டம் வட்டம் பொன்னன்குறிச்சி கிராமத்தில் பெரு வெள்ளத்தால் சேதமடைந்த மின்கம்பங்கள், வீடுகள் உள்ளிட்ட பல்வேறு வெள்ள பாதிப்புகளையும், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து காட்சிப்படுத்தப்பட்டுள்ள புகைப்படங்கiயும் அதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட பொதுமக்களை சந்தித்து சேத விபரங்களையும், அவர்களது கோரிக்கைகளையும் கேட்டறிந்தார். அதிககன மழையினால் பாதிக்கப்பட்டிருந்த ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் அப்போதைய நிலை குறித்தும், சுகாதாரத்துறையின் மூலம் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, விளக்கமாக எடுத்துரைத்தார்.
ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியம் மணத்தி கிராமத்தில் அதிக கனமழையின் காரணமாக கடம்பாகுளம் கண்மாய்க்கு வரப்பெற்ற அதிக நீர்வரத்து காரணமாக திருநெல்வேலி முதல் திருச்செந்தூர் வரை செல்லும் புறவழிச் சாலை துண்டிக்கப்பட்டு சேதமடைந்ததைத் தொடர்ந்து, தற்போது பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பயணம் மேற்கொள்ளும் வகையில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள சாலையினையும்;, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் அப்பகுதிகளில் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பயிர் சேத விவரங்கள் குறித்து காட்சிப்படுத்தப்பட்டுள்ள புகைப்படங்களையும்; பார்வையிட்டு சம்பந்தப்பட்ட அலுவலரிடம் சேத விபரங்கள் குறித்து கேட்டறிந்தார்கள். ஆழ்வார்திருநகரி மணத்தி ஊராட்சிப் பகுதியில் அதிகனமழை மற்றும் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகவும் கடம்பாகுளத்திற்கு செல்லும் வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக மணத்தி பகுதியில் சேதமடைந்துள்ள சாலைகள், விவசாய நிலங்களை பார்வையிட்டு, விவசாயிகளிடம் பயிர் சேத விபரங்கள் குறித்து கேட்டறிந்தார்கள். மேலும் அந்த சாலை வழியாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பயணம் மேற்கொள்ள ஏதுவாக தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள சாலையினையும் பார்வையிட்டார்கள். மேலும் பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகள், ஓடுபாலங்கள், மேம்பாலங்கள் உள்ளிட்ட வெள்ள பாதிப்புகளை புகைப்படங்கள் வாயிலாக பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் வேலு விளக்கமாக எடுத்துரைத்தார். அதிக கனமழை காரணமாக சேதமடைந்த ஏரல் மேம்பாலத்தினை பார்வையிட்டு, ஏரல் பஜார் பகுதியில் பொதுமக்கள் மற்றும் வணிகப் பெருமக்களை சந்தித்து சேத விவரங்களையும், அவர்களது கோரிக்கைகளையும் கேட்டறிந்தார்.
முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்டத்தில் பெய்த அதிகனமழை காரணமாகவும், தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகவும் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புகள் குறித்து காட்சிப்படுத்தப்பட்டுள்ள புகைப்படங்களை ஒன்றிய அரசின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்;, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கனிமொழி எம்.பி ஆகியோர் முன்னிலையில் பார்வையிட்டு, சேதங்கள் குறித்து கேட்டறிந்தார். மேலும், மாவட்டத்தில் அதிக கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு நிதியின் முக்கியமான தேவையை அடிக்கோட்டிட்டுக் காட்டும் ஒரு விரிவான 72 பக்க ஆய்வறிக்கையினை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.
ஆய்வின்போது வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, ஒன்றிய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் முருகன், கூடுதல் தலைமைச் செயலாளர் வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர், தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை வேளாண்மை உற்பத்தி ஆணையர் அரசு முதன்மைச் செயலாளர் அபூர்வா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன், பேரூராட்சிகளின் இயக்குநர் கிரண்குரலா, கலெக்டர் லட்சுமிபதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், நயினார் நகேந்திரன் எம்.எல்.ஏ, முன்னாள் எம்.பி சசிகலாபுஷ்பா, பாஜக மாவட்ட தலைவர் சித்தாரங்கன், உள்பட அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
படம்: தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாரமன், கனிமொழி எம்.பி, அமைச்சர் தங்கம் தென்னரசு, கலெக்டர் லட்சுமிபதி, எஸ்.பி பாலாஜி சரவணன், உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

