தூத்துக்குடி.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் அமைந்துள்ள கொற்கை ஊராட்சி பகுதியில் கனிமொழி எம்.பி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நிவாரணம் வழங்கினார். அப்போது, கடந்த 21ம் தேதி கனிமொழி எம்.பி உதவி எண்ணின் மூலம் அழைப்பு விடுத்து, பெண் குழந்தை பெற்ற தாய் மற்றும் குடும்ப உறுப்பினர்களை திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி இல்லத்தில் சந்தித்தார். குழந்தையை தான் கையால் வாங்கிய கனிமொழி கருணாநிதி எம்.பி, பெற்றோர்களின் விருப்பத்திற்கேற்ப கனிமொழி என்று பெயர் சூட்டினார்.
திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழியின் உதவி எண்ணிற்கு கடந்த 21ம் தேதி மதியம் 3 மணி அளவில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் அமைந்துள்ள கொற்கை ஊராட்சியிலிருந்து கர்ப்பிணிப் பெண் அபிஷாவை வெள்ளம் சூழ்ந்த வீட்டிலிருந்து பாதுகாப்பாக மீட்டு மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்றும் பிரசவ தேதியும் நெருங்கியது என்றும் அவரது குடும்ப உறுப்பினரிடம் இருந்து அழைப்பு வந்தது.
வெள்ள நீர் சூழ்ந்த பகுதியான கொற்கை ஊராட்சிக்கு, கனிமொழி அவரது வாகனத்தை கர்ப்பிணிப் பெண் வீட்டிற்கு அனுப்பினார். மூன்றாம் தளத்திலிருந்த கர்ப்பிணிப் பெண்ணைப் பத்திரமாக மீட்ட பின்னர் வாகனம் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அன்று இரவு 9 மணி அளவில் அபிஷாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது!
வெள்ளம் சூழ்ந்த கிராமத்தில் தவித்த கர்ப்பிணி பெண்ணிற்குக் கனிமொழி எம்.பி. உதவியதன் வாயிலாக சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு செல்ல முடிந்தது. பிறந்த குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாகவும், தானும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் எல்லாவற்றிற்கும் கனிமொழி எம்.பி தான் காரணம் என்றும், அவருக்கு மிக்க நன்றி என்று அபிஷா கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சந்திப்பின் போது ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ் உடனிருந்தார்.

