தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த பெரும் மழையால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக கோரம்பள்ளம் குளம் உடைப்பு ஏற்பட்டது. கூடுதல் பாதிப்பாக அமைந்தது. கடந்த காலங்களில் பெய்த மழையில் பாதிக்காத பகுதியில் கூட இந்த மழை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாநகரில் பல்வேறு பகுதியில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைத்து அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. சில பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் உணவுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் பலர் குடியிருப்பின் மேல்பகுதியில் தங்கியுள்ளனர். சிலர் தங்களது வீடுகளிலிருந்து வெளியில் வரமுடியாத நிலையில் உள்ளனர்.

இந்நிலையில் 3ம் மைல் அரசு மருத்துவக் கல்லூரி பகுதியில் உள்ள கந்தன் காலணி, காமராஜர் நகர் ஆகிய இடங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேரில் ஆய்வு மேற்கொண்டு குறைகளை கேட்டறிந்து அப்பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை பக்கிள் ஓடை மற்றும் கால்வாய் பகுதிகளுக்கு செல்லும் வகையில் தேவையான இடங்களில் சாலைகள் தோண்டப்பட்டு கால்வாய் அமைத்து தேங்கியுள்ள மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதை நேரடியாக ஆய்வு மேற்கொண்டு முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு தேவையான உணவுகள் போர்வைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.
ஆய்வின் போது அமைச்சர் மனோதங்கராஜ், துணை மேயர் ஜெனிட்டா, கவுன்சிலர்கள் இசக்கிராஜா, ரெக்ஸின், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், வட்டச்செயலாளர் செல்வராஜ், மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ஸ்டாலின் பாக்கியநாதன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மணி, அல்பட், உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்.
அனைத்து பகுதிகளிலும் மாமன்ற உறுப்பினர்கள் திமுகவின் நிர்வாகிகள் உள்பட தொண்டர்கள் வரை களம் இறங்கி முழுமையாக மக்கள் பணியாற்றி வருகின்றனர்.

