தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தின் 27வது புதிய மாவட்ட கலெக்டராக கோ.லட்சுமிபதி பதவி ஏற்றுக்கொண்டார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடி தனி மாவட்டமாக 1986ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி அப்போதைய தமிழக முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரனால் அறிவிக்கப்பட்டு 38வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
சென்னைக்கு அடுத்தபடியாக தரைவழி, வான்வழி, கடல்வழி, இரயில் வழி, ராக்கெட் ஏவுதளம் என அனைத்து போக்குவரத்து வசதிகளை பெற்ற மாவட்டமாக தூத்துக்குடி விளங்குகிறது. தொழில் துறை மட்டுமல்லாமல் கல்வித்துறையிலும் போட்டிப்போட்டு முன்னேற்றம் கண்டு வருகிறது தூத்துக்குடி மாவட்டம்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக பணியாற்றி வந்த செந்தில்ராஜ், தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளதையடுத்து செங்கல்பட்டு சப்- கலெக்டராக பணிபுரிந்து வந்த லட்சுமிபதி தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தின் 27வது கலெக்டராக லட்சுமிபதி பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘தூத்துக்குடி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும். வளர்ச்சித் திட்டங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும். அனைத்து திட்டங்களும் வெளிப்படையாக செயல்படுத்தப்படும். மாவட்டத்தின் வளர்ச்சிக்காக நல்ல நடவடிக்கைகளை தொடர்ந்து செயல்படுத்துவோம்’ என்று கூறினார்.
பதவியேற்றுக் கொண்ட புதிய கலெக்டருக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், மாவட்ட உணவு வழங்கல் அலுவலர் அபுல்காசிம், சப்-கலெக்டர் கௌரவ் குமார், தூத்துக்குடி பிரஸ்கிளப் முன்னாள் தலைவர் சண்முகசுந்தரம், செயற்குழு உறுப்பினர் ஆத்திமுத்து, முன்னாள் செயற்குழு உறுப்பினர்கள் கண்ணன், ராஜ், உறுப்பினர்கள் பாலகிருஷ்ணன், மாரிமுத்து, ரேகா மற்றும் செய்தியாளர்கள், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன் பாண்டியன், உதவி அலுவலர் முத்துகுமார், பல்வேறு துறை அதிகாரிகள் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

