ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
தொற்று பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் கடந்த ஜனவரி மாதம் முதல் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அந்தவகையில் முதற்கட்டமாக சுகாதாரப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. தொடர்ந்து முன்கள பணியாளர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு சராசரியாக 80 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டு கொள்கின்றனர். முதியவர்களிடையே தடுப்பூசி வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் பல்வேறு கட்சி தலைவர்கள், அரசு அதிகாரிகள், தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் என அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று காலை சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தடுப்பூசி போட்டுக் கொண்டார். அவருக்கு ‘கோவேக்சின்’ தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி போட்டு கொண்ட பின்னர், அவருக்கு மருத்துவமனை ‘டீன்’ டாக்டர் ஜெயந்தி, தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை வழங்கினார். இதையடுத்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
கரோனா வைரஸ் தொற்று நோய், ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு எளிதாக பரவக்கூடியது. இந்த நோயில் இருந்து விடுபடுவதற்கு, தமிழகத்தில் அரசு மருத்துவமனை, சுகாதார மருத்துவமனை என 2 ஆயிரத்து 682 இடங்களில் பொது மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது. மேலும், தனியார் மருத்துவமனையில் 924 இடங்களில் போடப்படுகிறது. அந்தவகையில் தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 3 ஆயிரத்து 606 இடங்களில் தடுப்பூசி போடப்படுகிறது.
தமிழகத்துக்கு இதுவரை 36 லட்சத்து 14 ஆயிரம் தடுப்பூசிகள் பெறப்பட்டுள்ளது. இதில் 30 லட்சத்து 47 ஆயிரம் ‘கோவிஷீல்டு’ மருத்தும், 5 லட்சத்து 67 ஆயிரம் ‘கோவேக்சின்’ தடுப்பு மருந்துகளும் அடங்கும். இதுவரை தமிழகத்தில் 11 லட்சத்து 25 ஆயிரத்து 703 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். அதில் 10 லட்சத்து 98 ஆயிரத்து 857 பேர் ‘கோவிஷீல்டு’-ம், 26 ஆயிரத்து 846 பேர் ‘கோவேக்சின்’ தடுப்பூசியும் போட்டுள்ளனர். அந்தவகையில், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
தினமும் ஒவ்வொருவரும் ஏதாவது பணியில் ஈடுபட்டுகொண்டிருக்கிறோம். தொழில் மற்றும் பணி நிமித்தமாக அலுவலகம், மார்க்கெட் என வெளியே சென்று வருகிறோம். இப்படி வெளியே செல்கின்ற இடத்தில் தொற்று பாதிப்பு ஏற்பட்டுவிடாமல் காத்து கொள்வதற்காக, அரசு சார்பில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. எனவே அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அரசு அறிவித்த விதிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும். முககவசம், சமூக இடைவெளிகளை கடைபிடிக்க வேண்டும். கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். இதனை அனைவரும் கடைப்பிடித்தால் கரோனா வைரஸ் பரவலை தடுக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்

