தூத்துக்குடி.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பெரும் செல்வாக்கைக் கொண்ட ஒரு முக்கிய அரசியல் கட்சியாகும். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். கட்சியில் கணக்கு கேட்டதற்காக கருணாநிதி அவரை கட்சியில் இருந்து நீக்கியதையடுத்து, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பிரிந்த அணியாக 17.10.1972 அன்று மதுரையில் அதிமுக என்ற கட்சி தொடங்கப்பட்டது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் கட்சி 7 முறை பெரும்பான்மை பெற்றுள்ளது. சட்டசபை மற்றும் மாநில வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அரசியல் கட்சியாக திகழ்கிறது. தற்போது தமிழக சட்டப் பேரவையில் முக்கிய எதிர்க்கட்சியாக இருந்து வருகிறது.
எம்.ஜி.ஆர் மறைவிற்கு பின் அ.தி.மு.க கட்சியில்; ஜெ.ஜெயலலிதா பொதுச் செயலாளராக இருந்தார். அவர் இருக்கும் வரை தமிழக மக்களிடையே மிகவும் செல்வாக்கு மிக்க தலைவராகவும், கட்சியில் ஆளுமைமிக்க நபராகவும் இருந்தார்.
ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சசிகலாவை பொதுச்செயலாளராக அனைவரும் ஏற்றுக்கொண்ட பின் ஒரு வழக்கு சம்பந்தமாக சசிகலா சிறை செல்ல நேரிட்ட போது, எடப்பாடி பழனிச்சாமியை தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அதன் பின்னர் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக தினகரன் தலைமையில் 18 எம்எல்ஏக்கள் தனி அணியாக செயல்பட்டனர்.
அதன்பின் சட்டமன்றத்தில் கட்சி குளறுபடிகளும், நீதிமன்ற வழக்குகள் வில்லங்கமும் அதிமுக கட்சியை தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட சில வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.
ஜெ.மறைவிற்கு பின்னர் 2017 முதல்; 2022 வரை, கட்சி இரட்டை தலைமையின் கீழ் வழி நடத்தப்பட்டது. தமிழகத்தின் முன்னாள் முதல்வர்கள் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி கே.பழனிசாமியும் முறையே ஒருங்கிணைப்பாளராகவும், இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தனர். அதன் பின்னர் 11.07.2022 முதல், அ.தி.மு.க., கட்சியின் பொதுச் செயலாளராக, தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டு, தற்போது அவரது தலைமையின் கீழ் அதிமுக செயல்பட்டு வருகிறது.
இதுகுறித்து, தூத்துக்குடி மாநகர் மாவட்ட அதிமுக ஓ.பி.எஸ் அணி மாவட்ட செயலாளர் ஏசாதுரை கூறுகையில்
எடப்பாடி அணி, பன்னீர்செல்வம் அணி, தினகரன், சசிகலா என பல அணிகளாக பிரிந்தாலும் நாங்களே உண்மையான அதிமுக என்பதை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நிரூபிப்போம். எங்களது இதய தெய்வம் அம்மா உலா வந்த கொடநாடு பங்களாவில் பல்வேறு ஆவணங்கள் இருந்தன. அதற்கென நியமிக்கப்பட்ட பாதுகாவலர்களும் இருந்து வந்த நிலையில், சிலர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டனர். ஒருசிலர் விபத்து மூலம் இறப்பு என வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அம்மாவால் அடையாளம் காட்டப்பட்டு, இரண்டு முறை முதலமைச்சராக பணியாற்றிய ஓ.பன்னீர்செல்வம், தொடர்ந்து அந்த குற்றவாளிகள் யார் என்பதை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டுமென்று ஒருமுறை தமிழகம் முழுவதும் தினகரனோடு இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம். சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் போது எங்கள் கட்சி எம்.எல்.ஏ வைத்தியலிங்கம் அது சம்பந்தமாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதனையடுத்து தமிழக முதலமைச்சர் பேசுகையில், கொடநாடு சம்பவத்தில் குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் எந்த உயர் பதவியில் இருப்பினும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியாக தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை தற்போது அதிமுகவில் இருக்கின்ற பலர் திமுகவில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்கள். மாற்றுக்கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அதிமுகவில் இருந்து கொண்டே 2017ம் ஆண்டு எடப்பாடி பழனிச்சாமி மீது குற்றம் சுமத்தியவர் தான் இன்று மாவட்டச் செயலாளராக உலா வருகிறார். இதில் பலர் இன்று வரை திமுகவினரோடு தொடர்பு வைத்துக் கொண்டு சுயநலத்தோடு அவர்கள் நலனை மட்டுமே பார்த்துக் கொண்டு வருகின்றனர். குடும்ப உறுப்பினர் ஒருவர் கட்சியின் பொறுப்பில் இருந்து கொண்டு, கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டு எந்த பணியையுமே செய்யாமல் உள்ளார். இதுபோன்ற நிலைதான் அதிமுகவில் உள்ளன. உண்மையான கட்சிக்காரர்கள் எங்களோடு தான் இருக்கிறார்கள். வரும் காலம் ஓ.பி.எஸ் காலம் தான் என்பதை தமிழகத்தில் நாங்கள் நிரூபித்துக் காட்டுவோம் என்று அதிமுக ஓ.பி.எஸ் அணி மாவட்ட செயலாளர் ஏசாதுரை தெரிவித்தார்.

