தூத்துக்குடி.
தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அண்ணா பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்டு 57 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிகள் கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சுமார் ரூ.57 கோடி மதிப்பில் 4 தளங்களாக பேருந்து நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் 29 பேருந்துகள் ஒரே நேரத்தில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. தரை தளத்தில் 20 கடைகளும், முதல் தளத்தில் 49 கடைகள், 2வது மற்றும் 3வது தளத்தில் 29 கடைகள் என சுமார் 120 கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. பேரூந்து உள்ளே வருவதற்கும் மற்றும் பயணிகளை ஏற்றி இறக்க வருகை தரும் கார், ஆட்டோ, உள்ளிட்ட வாகனங்கள் வருவதற்கென்றும் 9 வழிகள் அமைக்கப்பட்டுள்ளது. கார் மற்றும் இருசக்கர வாகன பார்க்கிங் முதல் தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையம் முழுவதும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதை கடந்த ஞாயிற்றுக் கிழமை கனிமொழி எம்.பி. தலைமையில் அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். விழாவில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி, மார்க்கண்டேயன் எம்எல்ஏ, கலெக்டர் செந்தில்ராஜ், ஆணையர் தினேஷ்குமார், எஸ்.பி.பாலாஜி சரவணன் மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். புதன் கிழமை அன்று முறையாக பேருந்து நிலையம் செயல்பட துவங்கி பொதுமக்கள் போக்குவரத்து பயன்பாட்டிற்கு வந்தது.


இந்நிலையில் மேயர் ஜெகன் பெரியசாமி திடீர் ஆய்வு மேற்கொண்டு அந்தந்த வழித்தடத்தில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதா, பயணிகள் வந்து செல்ல ஏதேனும் குறைகள் இருக்கின்றதா என கேட்டறிந்து, அங்குள்ள பணியாளர்களிடம் அனைத்து பகுதிகளும் முறையாக பராமரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
முன்னதாக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மாநகர பகுதிகளில் பொதுமக்கள், வியாபாரிகள் குறைகளை போக்கும் விதமாக புதிதாக கட்டப்பட்டுள்ள கழிப்பறைகளை ஆய்வு மேற்கொண்டார்.
ஆணையர் தினேஷ்குமார், மாநகராட்சி மண்டல தலைவர்கள், கலைச்செல்வி, திலகராஜ், பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ரவீந்திரன், வட்ட செயலாளர் கதிரேசன், போக்குவரத்து தொழிற்சங்க தலைவர் கருப்பசாமி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி மற்றும் ஜோஸ்பர், பிரபாகர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

