தூத்துக்குடி
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி முழுவதும் ஒவ்வொரு பகுதியாக வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார்.
அதன்படி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி 59வது வார்டு பகுதியான சூசை நகர் பகுதியில் கடந்த 20ம் தேதி பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது, அப்பகுதி மக்கள் ஊராட்சியாக இருந்த கால கட்டத்தில் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர் குழாய்கள் பல சேதமடைந்துள்ளது. சீரான குடிநீர் சில சமயங்களில் கிடைப்பதில்லை. இதனால் நாங்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகிறோம். அதை முறைப்படுத்தி வழங்க வேண்டும், என்று கோரிக்கை வைத்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு, தேவையற்ற தண்ணீர் சாலையில் தேங்கி பாசி படிந்து, சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக வந்த தகவலையடுத்து, வியாழக்கிழமை நேரில் சென்று அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அப்பகுதியில், குடிநீர் குழாய்களை உடனடியாக சரி செய்யும் பணியை மேற்கொண்டு அதன் அடிப்படையில், ஊராட்சி சார்பில் வழங்கப்பட்டிருந்த குடிநீர் குழாய்களை மறுசீரமைப்பு செய்து, மாநகராட்சி குடிநீர் திட்ட இணைப்புடன் இணைத்து புதிதாக 30 இடங்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு குடிநீர் குழாய்களை அமைச்சர் கீதாஜீவன் தனது சொந்த நிதியிலிருந்து அமைத்துக் கொடுக்கும் பணியை துவங்கி வைத்து, அதை பார்வையிட்டார். பின்னர், பொதுமக்களிடம் இனி இப்பகுதியில் சீரான குடிநீர் கிடைக்கும் என்றும், புதிய கால்வாய் வசதியும் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார்.
நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் வக்கீல் பாலகுருசாமி, கவுன்சிலர்கள் பட்சிராஜன், சுயம்பு, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் பிரபு, வட்ட பிரதிநிதி பாஸ்கர் மற்றும் மணி, தங்கம்மாள்புரம் மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

