இந்தியன் கயாக்கிங் மற்றும் கனோயிங் அசோசியேசன் மற்றும் தமிழ்நாடு அசோசியேசன் ஆப் கயாக் மற்றும் கனோயிங் சார்பில் தென் தமிழகத்திலேயே முதல் முறையாக பியர்ல் சிட்டி ஓஷன் ஸ்போட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியான கடல் சாகச போட்டி தொடக்க விழா தூத்துக்குடி முத்து நகர் கடற்கரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இப்போட்டிகளில், நின்று கொண்டே துடுப்பு செய்யக்கூடிய போட்டி மற்றும் அமர்ந்திருந்து துடுப்பு செய்யக்கூடிய போட்டி என இரு பிரிவுகளாக நடத்தப்பட்டன.
இதில், தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட 13 மாநிலங்கள் மற்றும் இந்திய ராணுவம், இந்திய கடற்படை, இந்திய எல்லை பாதுகாப்பு படை ஆகிய படைப்பிரிவினர் என மொத்தம் 16 அணிகள் பங்கேற்றன. இரண்டு நாள்கள் நடைபெற்ற இப்போட்டிக்கான பரிசளிப்பு விழா தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் சனிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று சிறப்பிடம் பெற்ற அணியினருக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள், சுழற்கோப்பை ஆகியவை வழங்கி பாராட்டினார்.


இப்போட்டிகளில், வெற்றிபெற்ற வீரர்களுக்கு முதல் பரிசாக தங்க பதக்கம் மற்றும் ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசாக வெள்ளி பதக்கம் ரூ.7 ஆயிரம், மூன்றாவது பரிசாக வெண்கலப் பதக்கம் ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில், தூத்துக்குடி அக்வா அவுட்பேக் நிர்வாக இயக்குநர் அர்ஜுன் மோத்தா, ஒருங்கிணைப்பாளர்கள் மெய்யப்பன், ரோஜர், சதீஷ், மிதுன், மாநில மீனவரணி துணைச் செயலளர் புளோரன்ஸ், வடக்கு மண்டலத் தலைவர் நிர்மல் ராஜ், பகுதிச் செயலர்கள்
சுரேஷ்குமார், ரவீந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்

