தூத்துக்குடி
தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் தூத்துக்குடியில் உள்ள கீதாமெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஓருங்கிணைத்த தூத்துக்குடி புறநகர் குறுவட்ட அளவிலான மாணவ மாணவியர்களுக்கான தடகள போட்டி தருவை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பேசுகையில் தமிழகம் முதலமைச்சர் தளபதியார் எல்லாத்துறைகளும் முன்னேற்றம் அடைந்து இந்தியாவிற்கு தமிழ்நாடு முதன்மை மாநிலமாக இருக்க வேண்டும் என்று தொலைநோக்கு பார்வையோடு திட்டங்கள் வகுக்கப்பட்டு முறையாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதே போல் கல்வியறிவு இல்லாத தமிழகத்தை உருவாக்கும் வகையில் கல்வித்துறைக்கு அதிக நிதி ஓதுக்கிடு செய்யப்பட்டு கல்வியின் தரத்தை உயர்த்தி மாணவ மாணவிகளின் அறிவுத்திறனை வளர்க்கும் வகையில் பள்ளி கல்வித்துறை செயல்படுகிறது. அதே போல் உடல் ஆரோக்கியத்திற்கு விளையாட்டும் அவசியம் என்பதை உணர்ந்து விளையாட்டுத்துறையை மேம்படுத்தி உலகளவில் தமிழக வீரர்களை உருவாக்கும் வகையில் என்னற்ற விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் பங்கு பெறுபவர்களையும் அரசு ஊக்குவித்து வருகிறது. இதில் கலந்து கொண்டுள்ள மாணவ மாணவிகளுக்கு கல்வியும் அவசியம் விளையாட்டும் முக்கியம் என்பதை உணர்ந்து அதில் சாதனைகள் புரிந்து தமிழகத்திற்கும் தமிழக அரசிற்கும் பெருமையை சேர்க்கும் வகையில் நீங்கள் முன்உதாரணமாக இருக்க வேண்டும் என்று பேசினார்.

விழாவில் மாவட்ட விளையாட்டுதுறை அலுவலர் அந்தோணி அதிஷ்டராஜ், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கண்ணதாசன், கீதா மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி செயலாளர் ஜீவன்ஜேக்கப், தலைமை ஆசிரியர் சித்ரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

