தூத்துக்குடி
திமுக ஆட்சி பொறுப்பேற்றப்பின் முறையாக அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் முறையாக தேர்தல் நடைபெற்றது. அதில் தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றி, மாநகராட்சி பகுதி தேர்தலும் நடைபெற்றது. அதில் 60 வார்டு உறுப்பினர்கள் தேர்வில் திமுக தலைமையிலான கூட்டணி 53 இடங்களில் வெற்றிப் பெற்றன. மேயராக ஜெகன் பெரியசாமி தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டு பொறுப்பேற்றப்பின் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டு ஆமை வேகத்தில் நடைபெற்ற பல்வேறு பணிகளை முறையாக முறைப்படுத்தி செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில் தமிழக அரசின் சிறப்பு நிதியும் வழங்கப்பட்டு புதிய பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, புதிதாக கால்வாய் இல்லாத பகுதிகளில் மழைநீர் தேங்காதவாறு வடிகால் அமைக்கப்பட்டு புறநகர் பகுதிகள் மட்டுமின்றி நகர பகுதிகளிலும், மக்கள் நலன் கருதி சாலை வசதி, புதிதாக ஏற்படுத்தப்பட்டு அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன் புதுமையான மாநகராட்சி பகுதியாக உருவாகுவதற்கு அரசு துறை அதிகாரிகள் மாமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் அவ்வப்போது பல்வேறு பகுதிகளில் சுழற்சி முறையில் பார்வையிட்டு, மக்கள் நலன் தான் முக்கியம் என்று பாரபட்சமின்றி அனைத்து வார்டு பகுதிகளிலும் கட்டமைப்புகளை செய்து வருகிறார்.

பக்கிள் ஓடை பகுதியில் மழை காலங்களில் வரும் நீர் மட்டும் வருவதற்கும் மற்ற பல்வேறு பகுதிகளிலுள்ள தேவையற்ற கழிவு நீர்கள் தருவைகுளத்தில் உள்ள மறுசுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் வகையில் பணிகள் இருந்து வருகின்றன.
இதற்கிடையில் தூத்துக்குடி பகுதியில் திடீரென பெய்த கனமழையால் மழைநீர் எங்கும் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கும் விதமாக மேயர் ஜெகன்பெரியசாமி, ஆணையர் தினேஷ் குமாருடன் கொட்டும் மழையில் சி.வ.அரசு பள்ளி அருகில், மாநகராட்சி எதிரில், போல்டன்புரம் பள்ளி அருகில், கடற்கரை சாலை கரிக்களம் பகுதி மற்றும் ஓடை குரூஸ்புரம், கந்தசாமிபுரம், செல்வநாயகபுரம், டி.எம்.சி.காலனி, புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள பகுதி உள்ளிட்ட இடங்களில் அவசர நடவடிக்கை மேற்கொண்டு, மழை நீர் வெளியேறுவதை பார்வையிட்டார்.
இதுகுறித்து மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில்: தமிழக முதலமைச்சர் தளபதியார் உத்தரவிற்கிணங்க பல்வேறு பணிகளை முறையாக முறைப்படுத்தி மக்கள் நலன் தான் முக்கியம் என்ற தாரக மந்திரத்துடன், மக்கள் பணிகளுக்கு முன்னுரிமை வழங்கி வருகிறோம். கடந்த அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளாக நடைபெறாத பணிகளை நாங்கள் பொறுப்புக்கு வந்த 18 மாதங்களில் புதிய பணிகள் தொடங்கப்பட்டு, இதில் பல பணிகள் முடிவு பெற்றுள்ளன. எந்த கனமழை பெய்தாலும் மாநகராட்சி பகுதியில் மழைநீர் தேங்காதவாறு துரித பணிகள் மேற்கொண்டுள்ளோம். மாநகராட்சி உயர்அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை அனைவரும் மழைக்காலங்களில் என்னோடு மக்கள் நலனை கருத்தில் கொண்டு பணியாற்றுவதற்கு உடனிருப்பார்கள். ஏதாவது ஒரு பகுதியில் குறைபாடுகள் இருந்தால் அதை உடனடியாக எனது கவனத்திற்கு கொண்டு வரும் பட்சத்தில் தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார்.
இந்த ஆய்வில், மாநகராட்சி பொறியாளர் சரவணன், முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, சுகாதார ஆய்வாளர் ஹரிகனேஷ் மற்றும் பிரபாகர், ஜோஸ்பர், அரசு துறை சார்ந்த அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அடாது மழையிலும் விடாது பணி செய்து வரும் மேயர் ஜெகன் பெரியசாமியின் செயல்பாட்டை கண்டு, மாநகராட்சி பகுதிக்குட்ட பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

