திருநெல்வேலி.
தனியார் வாகனங்களுக்கு அனுமதி இல்லாத சூழலில் கடந்த இரு நாட்களாக காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. பக்தர்கள் பஸ் படிக்கட்டில் அமர்ந்தபடி தங்களது உடமைகளுடன் பயணம் செய்தனர்.
நெல்லை மாவட்;டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். இதில் நெல்லை தென்காசி தூத்துக்குடி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.
இந்த ஆண்டு ஆடி அமாவாசை திருவிழா 15ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவில் 2 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக கடந்த 13ம் தேதி முதல் 17ம் தேதி 5 நாட்கள் தங்கிக்கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. இதை தொடர்ந்து தனியார் வாகனங்களில் குடில் அமைப்பதற்காவும் தங்களுக்கு தேவையான பொருட்களை கொண்டு செல்வதற்காகவும் தனியார் வாகனங்களில் பக்தர்கள் சென்றனர். பக்தர்கள் குடில் அமைத்து தங்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் தனியார் வாகனங்கள் கோவிலுக்கு செல்ல அனுமதியில்லை மாறாக அகஸ்தியர் பட்டியில் வாகனங்களை நிறுத்தி விட்டு அங்கிருந்து நேற்று முதல் 17ம் தேதி வரை அரசு பஸ்களில் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி தனியார் வாகனங்கள் அனைத்தும் அகஸ்தியர் பட்டியில் நிறுத்தப்பட்டது. அங்கிருந்து பக்தர்கள் அரசு பேருந்துகளில் கோவிலுக்கு சென்றனர். பக்தர்களின் வசதிக்காக 198 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதற்காக ஒவ்வொரு பயணியிடம் ரூ.25 கட்டணம் வசூலிக்கப்பட்டது. கடந்தாண்டும் இதே கட்டணம் வசூலிக்கபட்டது. முதல் நாளான நேற்று முன்தினம் முதலே ஒவ்வொரு பஸ்ஸிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பெரும்பாலான பேருந்தகளில் படிக்கட்டில் அமர்ந்தபடி பக்தர்கள் பயணம் செய்தனர். அவர்கள் நேற்று முன்தினம் முதல் 3 நாட்கள் கோவிலில் தங்கியிருப்பார்கள் என்பதால் உடைமைகளை எடுத்து கொண்டு சென்றனர். பக்தர்களின் வசதிக்காக அகஸ்தியர்பட்டியில் சிவந்திபுரம் ஊராட்சி சார்பாக குடிநீர் வசதியும் கழிப்பறை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை அகஸ்தியர்பட்டி தற்காலிக பேருந்;து நிலையத்தை ஆடி அமாவாசை திருவிழா பொறுப்பு அதிகாரி சிவ கிருஷ்ணமூர்த்தி பார்வையிட்டு போக்குவரத்து அதிகாரியுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் பகுதிகளில் சென்று ஆலோசனை நடத்தினார். அப்போது கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு அடிப்படை தேவைகள் போதுமானதாக உள்ளதா என்பது குறித்து கேட்டறிந்தனர். ஏற்பாடுகளை விரைவாக செய்யவும் ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.
இதனையடுத்து ஆடி அமாவாசை திருவிழா பொறுப்பு அதிகாரி சிவ கிருஷ்ணமூர்த்தியின் துரித நடவடிக்கையை கண்டு பொதுமக்கள், பக்தர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

