தூத்துக்குடியில் தேர்தல் பணியில் ஈடுபடும் காவல் துறையினருக்கு கரோனா தடுப்பூசி போடும் பணிகளை மாவட்ட ஆட்சியர் /மாவட்ட தேர்தல் அலுவலர் கி.செந்தில்ராஜ், துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரியில் தேர்தல் பணியில் ஈடுபடும் காவல் துறையினருக்கு கரோனா விழிப்புணர்வு பணிகள் மற்றும் கரோனா தடுப்பூசி போடும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் /மாவட்ட தேர்தல் அலுவலர் கி.செந்தில்ராஜ், இன்று (09.03.2021) துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர் பேசியதாவது: தமிழகத்தில் இதுவரை 7 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கரோனா மற்றும் உருமாறிய கரோனாவிற்கும் இந்த தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது ஆகும். பல்வேறு வெளிநாடுகளில் இந்த தடுப்பூசி பாதுகாப்பானது என்று சான்று வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டாக கரோனா காலத்தில் மருத்துவமனைகளில் மருத்துவ பணியாளர்களும், வெளியில் காவல் துறையினரும் கடுமையாக பணி செய்ததன் காரணமாகத்தான் ஆரம்ப கட்டத்தில் தமிழகத்தில் அதிகமாக பரவிய கரோனா படிப்படியாக குறைந்துள்ளது.
தற்போது தேர்தல் பணியில் ஈடுபடும் காவல் துறையினராகிய நீங்கள் பொதுமக்களை அதிகமாக சந்திப்பதுடன் அரசியல் கட்சி பிரமுகர்கள் கூட்டத்திலும் பொதுமக்களுடன் நெருக்கமாக இருக்கும். எனவே நீங்கள் உங்கள் பாதுகாப்பு மட்டுமின்றி உங்கள் குடும்பத்தாருக்கும் நீங்கள் சந்திக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பாக பொதுமக்களுக்கும் பாதுகாப்பாக இருக்க கரோனா தடுப்பூசி அவசியம் போட்டுக்கொள்ள வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குசாவடி நிலை அலுவலர்கள், காவல் துறையினர், வருவாய் துறையினர் என சுமார் 18,000 நபர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதுவரை 1000 காவல் துறையினருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இன்னும் 2000 நபர்களுக்கு தடுப்பூசி போட வேண்டும். சட்டமன்ற தேர்தலின்போது கரோனா பரவலின்றி சிறப்பாக தேர்தல் நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பேசினார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதிபாலன், சமூக நோய் தடுப்புத்துறை தலைவர் சுனிதா, மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் குமரன், கோவேக்சின் தடுப்பூசி ஒருங்கிணைப்பாளர் மாலையம்மாள் மற்றும் மருத்துவர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

