தூத்துக்குடி.
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் 65-க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் அமையப் பெற்று சுமார் 1.50 லட்சம் மக்கள் தொகை கொண்ட தூத்துக்குடி மாவட்டத்தில் 403 ஊராட்சிகளில் மிகப்பெரிய ஊராட்சியாக மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து விளங்கி வருகிறது.
100-க்கும் மேற்பட்ட தூய்மை காவலர்கள் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து முழுவதும் பெண் தூய்மை காவலர்கள் தூய்மை வாகனத்தை இயக்கிக் கொண்டே தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் அவர்களுக்குரிய உபகரணங்கள் வழங்கப்பட்டு அவர்களது கோரிக்கைகளையும் நிறைவேற்றி ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு உதவிகள் செய்து கொண்டு வரும் வேளையில், சுதந்திர தினத்தன்று சிறப்பாக பணியாற்றிய தூய்மை காவலர்கள் அனைவரையும் கௌரவித்தும் வருகின்றனர்.
இந்நிலையில், திமுக மாநில இளைஞரணி செயலாளரும், தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நடித்து உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘மாமன்னன்’ திரைப்படத்தை தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்கில் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு சங்க நிர்வாகிகள், திமுகவில் உள்ள பல்வேறு அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கூட்டம் கூட்டமாக பார்த்து வரும் நிலையில் பொதுமக்களும் தமிழகம் முழுவதும் குடும்பத்தோடு திரைப்படத்தை ரசித்து வருகின்றனர்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம் மற்றும் மீனவர் நலன், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனையின்படி, மாப்பிள்ளையூரணி ஊராட்சி பஞ்சாயத்துக்குட்பட்ட தூய்மை காவலர்கள் 100-க்கும் மேற்பட்ட அனைவருக்கும் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும், மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவரும், கூட்டுறவு கடன் சங்க தலைவருமான சரவணக்குமார் தனது சொந்த செலவில் அனைவருக்கும் டிக்கெட் வழங்கி, தூத்துக்குடியில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரிசன்பிளாசா திரையரங்கில் ‘மாமன்னன்’ திரைப்படத்தை கண்டு ரசித்தனர்.

இவர்களுடன் தெற்கு மாவட்ட ஆதிதிராவிட நல அணி அமைப்பாளர் டிடிசி ராஜேந்திரன், தெற்கு மாவட்ட திமுக துணை அமைப்பாளர் ஸ்டாலின், தூத்துக்குடி ஒன்றிய திமுக துணை செயலாளர் வசந்தகுமாரி, ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்க மாரிமுத்து, மகேஸ்வரி காமராஜ், ராணி, சேசுராஜா, சக்திவேல், பெலிக்ஸ், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்த குமார் மற்றும் கௌதம் உள்பட ஏராளமான திமுக நிர்வாகிகள், தொண்டர்களும் திரைப்படத்தை பார்த்து ரசித்தனர்.
திரைப்படம் பார்த்த அனைவரும் படம் நன்றாக இருப்பதாகவும், நல்ல சமுதாய கருத்துக்கள் நிறைந்த படமாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
24 மணி நேரமும் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வரும் தூய்மை காவலர்களை மகிழ்விக்க மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் செய்த இந்த முயற்சியை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
செய்தி தொகுப்பு: ப.சக்திவேல்

