நெல்லையில் காவல் நிலையம் முன்பு வெடிகுண்டு வீசிய 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்க தலைவர் கண்ணபிரான் கடந்த மாதம் நெல்லை தச்சநல்லூர் காவல் நிலையத்துக்கு தனது ஆதரவாளர்களுடன் சென்றபோது, காவல் நிலையம் முன்பு ஒரு கும்பல் வெடிகுண்டுகளை வீசியது. இதில் அதிர்ஷ்டவசமாக கண்ணபிரான் மற்றும் ஆதரவாளர்கள் உயிர் தப்பினர். இதுதொடர்பாக தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பிரவீன்ராஜ் (28), அழகர் (19), தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜசேகரன் (27), விக்ரம் (27), பாலமுருகன் (26), முத்துகுமரன் (23) ஆகிய 6 பேரை கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் கைதான 6 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வதற்கு நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன், டவுன் உதவி கமிஷனர் சதீஷ்குமார் ஆகியோர் பரிந்துரை செய்தனர்.இதையடுத்து கைதான பிரவீன்ராஜ் உள்பட 6 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அன்பு உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை தச்சநல்லூர் போலீசார் கோவை மத்திய சிறையில் சமர்ப்பித்தனர்.

