தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக பேருந்து நிறுத்தத்தில் இரவு நேரங்களில் தூத்துக்குடி டூ திருநெல்வேலி (ஒன் டூ ஒன்) பேருந்து வழித்தடத்தில் பணிபுரியும் நடத்துனர்கள் மற்றும் வசூல் பணம், பயணச்சீட்டிற்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருந்து வருவதால் நடத்துனர்கள் மனகுமுறலில் உள்ளனர்.
திருநெல்வேலி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநரின் சிந்தனையில் மாறுபாடாக உத்தித்த செயல்திட்டம் பொதுமக்கள் மற்றும் நடத்துனர்கள் என யாருக்கும் பயன்தராத வகையில் உள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ஒன் டூ ஒன் பேருந்துகளில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை உள்ள அனைத்து பேருந்து நிறுத்தங்களில் பயணிகளிடம் டிக்கெட் வழங்கி விட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்துனர் மட்டும் இறங்கி விடுவதும், பின்னர் திருநெல்வேலியில் இருந்து வரும் பேருந்தில் ஏறி நடத்துனர்கள் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்திற்கு வந்தடையும் நிலை உள்ளது.
மாவட்ட ஆட்சிய அலுவலக பேருந்து நிறுத்தத்தில் வெகுநேரம் காத்திருக்கும் நடத்துனரின் வசூல் பணத்திற்கும், அவரின் பாதுகாப்பிற்கும் எந்தவித உத்தரவாதமும் இல்லையாம். இதுசம்பந்தமாக நடத்துனர்கள் மேலதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் செல்லும் ஒன் டூ ஒன் பேருந்து நடத்துனர் பயணிகளிடம் டிக்கெட் வழங்கி விட்டு திருநெல்வேலி பேருந்து நிலையத்திலே இறங்கி விடுகிறார். அதே போல் நாகர்கோவில் பேருந்து நிலையத்திலும் நடத்துனர் டிக்கெட் வழங்கி விட்டு அங்கேயே இறங்கி விடுகிறார்.
ஆனால், தூத்துக்குடி – திருநெல்வேலி ஒன் டூ ஒன் பேருந்தில் மட்டும் நடத்துநர் பேருந்து நிலையத்தில் டிக்கெட் வழங்கி விட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை செல்லும் நிலை உள்ளது. மேலும், வசூல் பணத்தை கையில் வைத்துக் கொண்டு, இரவு நேரங்களில் பணத்திற்கும், உயிருக்கும் பாதுகாப்பற்ற நிலை இருக்கிறதாம்.
நடத்துனர்களிடம் விசாரித்த போது, மாவட்ட ஆட்சிய அலுவலக பேருந்து நிறுத்தத்தில் இரவு நேரங்களில் தனியாக பேருந்திற்கு காத்திருக்கும் சூழ்நிலை இருப்பதால் தங்களுக்கும் வசூல் பணத்திற்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் டிக்கெட் வழங்கி விட்டு நடத்துனர்கள் அங்கேயே இறங்க வேண்டும் என்றும அதற்கு; போக்குவரத்து கழகம் செவிசாய்க்காமல் தூத்துக்குடியில் இருந்து மாவட்டஆட்சியர் அலுவலகம் வரை கலெக்ஷன் பணத்தோடு நடத்துனர்கள் செல்ல வேண்டுமென்று சொல்லும்பட்சத்தில் அங்கு போக்குவரத்து கழக அலுவலர் ஒருவரை அந்த இடத்தில் பணியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால் நடத்துனர் ஒருவர் தனிநபராக இருந்து கொண்டு கலெக்ஷன் பணம் மற்றும் டிக்கெட்டோடு வெகுநேரம் அங்கு நிற்க வேண்டிய சூழல் உள்ளது. அந்த நேரத்தில் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் அதனால் ஏற்படும் விளைவுகள் நடத்துனர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
ஆகையால் போக்குவரத்து கழகம் இந்த விசயத்தை தனி கவனம் செலுத்தி நடத்துனர்களின் கையில் உள்ள பணம் மற்றும் அவர்களது உயிருக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பல்வேறு தரப்பினர் மத்தியில் கோரிக்கை எழுந்து வருகிறது.
திருநெல்வேலி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் இந்த விசயத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பதையும், மாவட்ட நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.

