தூத்துக்குடி.
கடந்த 2008ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி அப்பொது உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் தலைமையில் தூத்துக்குடியில் நடைபெற்ற அரசு விழாவில் அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி 10வது மாநகராட்சியாக தூத்துக்குடியை தரம் உயர்த்தி அறிவித்தார். தூத்துக்குடி 14வது வார்டு மீளவிட்டான் ஊராட்சி பகுதியிலிருந்து தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சியுடன் மீளவிட்டான் பகுதி இணைக்கப்பட்டு சுமார் 15 வருடங்கள் கடந்து விட்ட நிலையில் முழுமையான அடிப்படை வசதிகள் கிடைக்காமல் இன்று வரை பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் உள்ளடக்கிய சின்னகண்ணுபுரம் மற்றும் செல்வ விநாயகர் கோவில் பகுதியில் உள்ள சாலைகள் மிகவும் குண்டும் குழியுமாக இருந்து வருகிறது. மழைக்காலங்களில் தேங்கும் நீருடன் கழிவுநீர் அதில் கலந்து பல மாதங்களாக கிடக்கும் நிலை ஏற்படுகிறது.

இதனால் பல்வேறு தொற்று நோய்கள் உருவாகி பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. அந்த சாலையில் வழியாக கர்ப்பிணி பெண்கள், மாற்றுதிறனாளிகள், முதியோர்கள், மாணவ-மாணவியர்கள் செல்வதற்கும் கடுமையாக சிரமப்படுகின்றனர். இப்பகுதி மக்களின் நலன் கருதி சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்தோ அல்லது மாநகராட்சி நிர்வாக நிதியில் இருந்தோ இதுவரை சாலையே கண்டிராத இப்பகுதிக்கு புதிய தார் சாலைகள் அல்லது பேவர் பிளாக் சாலைகள் அமைத்து மழைநீர், கழிவு நீர் செல்வதற்கு முறையான கால்வாய் வசதிகள் செய்து தர வேண்டும். அதே போல் குடிதண்ணீர் குறைவான நேரம் மட்டும் வருகிறது. அதுவும் முறையாக வருவதில் அதையும் முறைப்படுத்தியும், மின் விளக்குகள் இப்பகுதி முழுவதும் அமைத்து தர வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமாருக்கு 14வது வார்டு பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

