நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் திருக்குவளை ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நடைப்பெற்ற கிராமசபை கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி ஆகியோர் இன்று கலந்து கொண்டனர்.
நாகப்பட்டினம் மார்ச் 22
இக்கிராமசபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:
அனைவருக்கும் உலக தண்ணீர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்த மண்ணில் உலக தண்ணீர் தின சிறப்பு கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. உலக தண்ணீர் தினத்தை ஒரு நாளாக கடைப்பிடிக்காமல் ஒவ்வொரு நாளும் தண்ணீரின் அவசியத்தையும் சிக்கனத்தையும் மனதில் வைத்து செயல்பட வேண்டும். நாம் உலக தண்ணீர் தினத்தை கொண்டாடித்தான் வருகிறோமே தவிர தண்ணீர் சிக்கனம் என்பது ஒவ்வொரு மனிதனும் கடைபிடிக்க வேண்டிய ஒன்று. நீர்வளத்தைக் காப்பதும் அதனை பெருக்குவது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதும் உலக தண்ணீர் தினத்தின் நோக்கமாகும். உலக நாடுகளில் மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். எனவே தண்ணீரின் அவசியத்தை உணர்ந்து ஒவ்வொரு துளி தண்ணீரையும் காப்பது நம் தலையாய கடமையாகும்.

அனைவரும் நிலத்தடி நீர் சேகரிப்பு அமைக்க முன்வர வேண்டும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில் ரூ.1752 கோடி மதிப்பீட்டில் ஒவ்வொரு ஊராட்சிகளிலும் நீர்தேக்கத்தொட்டி வீட்டுக்கு வீடு குடிநீர் திட்டம் ஆகியவை முழு வீச்சில் செயல்பாட்டுடன் வரும். இன்னும் இரண்டு மாதங்களில் கொள்ளிடம் ஆற்றில் புதியதாக கிணறுகள் தோண்டப்பட உள்ளது. ரூ.165 கோடி மதிப்பீட்டில் ஊரக பகுதிகளில் வீட்டுக்கு வீடு பைப் லைன் இணைப்பிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைவருக்கும் தண்ணீர் கிடைப்பதற்கு முழு முனைப்புடன் அரசும் மாவட்ட நிர்வாகமும் செயல்படும்.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள 193 கிராம ஊராட்சிகளிலும் இன்று உலக தண்ணீர் தினத்தையொட்டி கிராமசபா கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கிராம சபா கூட்டத்தில் கிராம ஊராட்சியில் தண்ணீர் மற்றும் சுகாதார நெருக்கடியை தீர்க்க மாற்றத்தினை துரிதப்படுத்துதல் ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் 2022-23ம் ஆண்டில் எடுக்கப்பட்ட பணிகள் கிராம ஊராட்சியின் கடந்த ஆண்டு தணிக்கை அறிக்கை சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்தல் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகள் முன்னேற்றம் கிராம வளர்ச்சி திட்டம் தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) ஜல்ஜீவன் இயக்கம் கிராம ஊராட்சிகளில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் ஒழிப்பு¸ குழந்தைகளுக்கான பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான நடவடிக்கை சாலை பாதுகாப்பு இரத்த சோகை குறித்த விழிப்புணர்வு குழந்தைகள் மற்றும் முதியோர்கள் உதவி எண்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு குறித்த விவாதங்கள் நடைபெறும்.
கிராமப்புற வளர்ச்சி வலுவாக இருந்தால் அந்நாட்டின் வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும். அதனடிப்படையில் கிராம சபாக் கூட்டங்கள் வாயிலாக அந்தந்த கிராமங்களில் வசிக்கும் மக்களின் கருத்தறிந்து அதனடிப்படையில் திட்டங்கள் உறுதி செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்படுகிறது. இந்த கிராமசபை கூட்டத்தில் மக்களுக்கு எல்லா விஷயங்களும் தெளிவாக தெரியப்படுத்தப்பட வேண்டும். கிராமத்தை ஆக்கப்பூர்வமாக கொண்டு செல்வதே கிராம சபா கூட்டமாகும். இக்கூட்டத்தின் முக்கிய நோக்கம் நமக்கு தேவையான திட்டங்கள் என்ன என்பதை முதலில் பொதுமக்களாகிய நீங்கள் அறிந்துக்கொள்ள வேண்டும்.
ஊராட்சி பகுதிகளில் போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி போதைப் பொருட்கள் பயன்பாடு இல்லாத ஊராட்சியை உருவாக்க வேண்டும். கிராம ஊராட்சி அளவில் குழந்தைகள் பாதுகாப்புக்குழு மூலமாக குழந்தைகளுக்கான பாதுகாப்பினை ஏற்படுத்துதல் வேண்டும். பொதுமக்கள் குடிநீரை சுத்தமான பாத்திரங்களில் மூடி வைத்து உபயோகிக்க வேண்டும். குடிநீர் தேக்கத் தொட்டிகள் மற்றும் பொதுக்குழாய்களில் தண்ணீர் வீணாவதை தடுத்திடும் வகையில் பயன்பாட்டில் இல்லாத போது குடிநீர் குழாயை மூடிவைத்திட வேண்டும். அனைத்து ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களின் பாதுகாப்பான குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். பள்ளி மாணவர்கள் கைபேசியில் இணையதள விளையாட்டுகள் விளையாடும் பொழுது ஏற்படும் கால விரையம் மற்றும் பொருள் விரையம் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பொது இடங்களில் மலம் கழிக்க கூடாதுஇ கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் கழிப்பறை கட்டப்பட்டு கழிவறையினை பயன்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் தெரிவித்தார்.
இக்கிராமசபா கூட்டத்தில் வேளாங்கண்ணி பேரூராட்சி துணைத்தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன் கீழையூர் ஒன்றிய பெருந்தலைவர் செல்வராணி ஞானசேகரன் உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) ஆர்.சௌந்தரராஜன் கீழையூர் வட்டாட்சியர் ராஜ்குமார் திருக்குவளை ஊராட்சிமன்றத் தலைவர் எல்.பழனியப்பன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பார்த்திமா ஆரோக்கிய மேரி வெற்றிச்செல்வன் அரசு அலுவலர்கள் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைத்து பொதுமக்களும் கலந்துக்கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

