வருகிற ஏப்ரல் 06 ம்தேதி அன்று நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பாதுகாப்பை பலப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டம் சிவலூர் மற்றும் பத்மநாபமங்கலம் ஆகிய பகுதிகளில் கல்குவாரி மற்றும் கிணறு வெட்டுவதற்காக பயன்படுத்தப்படும் வெடி மருந்து பொருட்கள் விற்பனை செய்யும் கிடங்குகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்டபட்ட சிவலூரில் பாளையங்கோட்டை கோவலன் தெருவைச் சேர்ந்த சுப்பையா மகன் ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான சொர்ணபால் டிரேடிங் கம்பெனி என்ற பெயரில் உள்ள வெடி மருந்து கிடங்கு மற்றும்
அதனைதொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பத்மாநாபமங்கலம் பகுதியில் பாளையங்கோட்டை கிருஷ்ணசாமி மகன் காமராஜ் என்பவருக்கு சொந்தமான கிருஷ்ணா எக்ஸ்ப்ளோசிவ்ஸ் என்ற பெயரில் உள்ள வெடிமருந்து விற்பனை கிடங்கு ஆகியவற்றை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பார்வையிட்டு, வெடி மருந்து கிடங்கில் பராமரித்து வரும் பதிவேடுகளையும் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், ஏரல் காவல் நிலைய ஆய்வாளர் மேரி ஜெமிதா, ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வசந்தகுமார் உட்பட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.

