நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் திருப்பூண்டி கிழக்கு ஊராட்சி காமேஸ்வரம் கிராமத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைப்பெற்ற கிராமசபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் இன்று கலந்து கொண்டார்.
நாகப்பட்டினம் ஜனவரி 26
நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் திருப்பூண்டி கிழக்கு ஊராட்சி காமேஸ்வரம் கிராமத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு நடைப்பெற்ற கிராமசபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் ம.பிரதிவிராஜ் இன்று கலந்துகொண்டார்.இக்கூட்டத்தில்;மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின் படி, கிராமசபா கூட்டங்கள் நடத்தப்பட்டு, கிராம மக்களுக்கு அரசின் மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்துத் திட்டங்கள் குறித்து விளக்கி விவாதம் செய்து கருத்தரியும் கூட்டமாக நடைபெற்று வருகிறது. குடியரசு தினம், மே தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய தேசிய தினங்களில் கட்டாயமாக கிராமசபா கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். இதுதவிர அரசினால் அறிவிக்கப்படும் திட்டங்கள் குறித்து விவாதித்து ஒப்புதல் பெறுவதற்கு சிறப்பு கிராம சபா கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
மகாத்மா காந்தியடிகள் அவர்கள் ஒரு நாட்டின் வளர்ச்சியை கிராமப் புறங்களின் வளர்ச்சியைக் கொண்டே கணிக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார். கிராமப்புற வளர்ச்சி வலுவாக இருந்தால் அந்நாட்டின் வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும். அதனடிப்படையில் கிராம சபாக் கூட்டங்கள் வாயிலாக அந்தந்த கிராமங்களில் வசிக்கும் மக்களின் கருத்தறிந்து அதனடிப்படையில் திட்டங்கள் உறுதி செய்யப்பட்டு, ஒப்புதல் பெறப்படுகிறது. இந்த கிராமசபை கூட்டத்தில் மக்களுக்கு எல்லா விஷயங்களும் தெளிவாக தெரியப்படுத்தப்பட வேண்டும். கிராமத்தை ஆக்கப்பூர்வமாக கொண்டு செல்வதே கிராம சபா கூட்டமாகும். இதுவரை நாம் அடைந்திருக்கின்ற பயன் மேலும் பயன் பெற இனி என்ன செய்ய வேண்டும் என்பதை மக்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இக்கூட்டத்தின் முக்கிய நோக்கம் நமக்கு தேவையான திட்டங்கள் என்ன என்பதை முதலில் பொதுமக்களாகிய நீங்கள் அறிந்துக்கொள்ள வேண்டும். இக்கூட்டத்தை பொருத்தவரை மக்களே மக்களுக்கு தேவையான விஷயங்களை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மூலமாக செயல்படுத்திக்கொள்வது ஒரு சிறந்த வாய்ப்பு.
இந்த கிராமசபா கூட்டத்தில் 16 கூட்டபொருள்கள் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் விவாதம் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட வேண்டும். இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் மற்றும் தணிக்கை அறிக்கை குறித்தும் அனைத்து பொது இடங்களையும் சுத்தம் செய்தல் மற்றும் பொது இடங்களை அசுத்தம் செய்யாதிருத்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் பிளாஸ்டிக் பொருட்களை கிராம ஊராட்சிகளில் பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்த்திட வேண்டும். கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் இதுவரை கணக்கெடுப்பு செய்யப்பட்ட விவரத்தினை குறிப்பிட வேண்டும். ஊராட்சி பகுதிகளில் போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி போதைப் பொருட்கள் பயன்பாடு இல்லாத ஊராட்சியை உருவாக்க வேண்டும். கிராம ஊராட்சி அளவில் குழந்தைகள் பாதுகாப்புக்குழு மூலமாக குழந்தைகளுக்கான பாதுகாப்பினை ஏற்படுத்துதல் வேண்டும். பொதுமக்கள் குடிநீரை சுத்தமான பாத்திரங்களில் மூடி வைத்து உபயோகிக்க வேண்டும். குடிநீர் தேக்கத் தொட்டிகள் மற்றும் பொதுக்குழாய்களில் தண்ணீர் வீணாவதை தடுத்திடும் வகையில் பயன்பாட்டில் இல்லாத போது குடிநீர் குழாயை மூடிவைத்திட வேண்டும். அனைத்து ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களின் பாதுகாப்பான குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும். பள்ளி மாணவர்கள் கைபேசியில் இணையதள விளையாட்டுகள் விளையாடும் பொழுது ஏற்படும் கால விரையம் மற்றும் பொருள் விரையம் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பொது இடங்களில் மலம் கழிக்க கூடாது, கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் கழிப்பறை கட்டப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற உறுதிமொழியினையும், ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு, மற்றும் காச நோய் விழிப்புணர்வு, வாக்காளர் விழிப்புணர்வு ஆகிய விழிப்புணர்வு உறுதிமொழிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் எடுத்துக் கொண்டனர். இக்கிராம சபா கூட்டத்தில் உதவி இயக்குநர் ஊராட்சிகள் சவுந்தரராஜன், திருப்பூண்டி கிழக்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசுதா கணேசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் பசுபதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பார்த்திமா ஆரோக்கிய மேரி, .வெற்றிச்செல்வன், அரசு அலுவலர்கள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்து பொதுமக்களும் கலந்துக்கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய்
மச்சோடா.

