வருகிற தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் தெய்வச்செயல்புரம், தட்டப்பாறை மற்றும் புதியம்புத்தூர் ஆகிய இடங்களில் வெடிமருந்து விற்பனை கிடங்குகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் திடீர் ஆய்வு.
வருகிற ஏப்ரல் 06ம்தேதி அன்று நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பாதுகாப்பை பலப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் இன்று வரை 60 நாட்களில் போக்ஸோ வழக்குகளில் சம்மந்தப்பட்டவர்கள் 7 பேர், கஞ்சா மற்றும் போதைப்பபொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டவர்கள் 4 பேர் மற்றும் மணல் திருட்டு வழக்கில் ஈடுபட்ட ஒருவர் உட்பட 35 பேர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் தெய்வச்செயல்புரம், கீழத்தட்டப்பாறை மற்றும் மேலத்தட்டப்பாறை ஆகிய பகுதிகளில் கல்குவாரி மற்றும் கிணறு வெட்டுவதற்காக பயன்படுத்தப்படும் வெடி மருந்து பொருட்கள் விற்பனை செய்யும் கிடங்குகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம், கீழத்தட்டப்பாறையில் பாளையங்கோட்டை கோவலன் தெருவைச் சேர்ந்த சுப்பையா மகன் ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான கோல்டன் டிரேடிங் கம்பெனி என்ற பெயரில் உள்ள வெடி மருந்து கிடங்கு, அடுத்தபடியாக மேலத்தட்டப்பாறையில் கோவில்பட்டியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவருக்கு சொந்தமான முரளி கிருஷ்ணா எக்ஸ்ப்ளோசிவ்ஸ் என்ற பெயரில் உள்ள வெடிமருந்து விற்பனை கிடங்கு, அதே போன்று கயத்தாரைச் சேர்ந்த அனந்தராமகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான செல்வம் எக்ஸ்ப்ளோசிவ்ஸ் என்ற பெயரில் உள்ள வெடிமருந்து விற்பனை கிடங்கு ஆகியவற்றை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பார்வையிட்டு, வெடி மருந்து கிடங்கில் பராமரித்து வரும் பதிவேடுகளையும் ஆய்வு செய்தார்.

மேலும் அதன் உரிமையாளர்களிடம், இந்த வெடி மருந்து பொருட்கள் கல்குவாரி மற்றும் கிணறு வெட்டுவதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், வருவாய்த்துறையினரிடம் உரிய அனுமதி பெற்று, உரிய சான்றோடு வருபவர்களுக்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்றும், அவ்வாறு வாங்க வருபவர்களிடம் அப்படியே கொடுத்து விடக்கூடாது, வெடிமருந்து விற்பனை கிடங்கின் பணியாளர்கள் சென்று, அவர்களுக்கு கல்குவாரிகள் மற்றும் கிணறுகளில் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து வெடிக்க வைக்க வேண்டும். மீதம் உள்ள வெடி பொருட்களை மீண்டும் அவர்களிடமிருந்து, திரும்ப பெற்று பாதுகாப்பான முறையில் கிடங்கில் இருப்பு வைக்க வேண்டும். முன், பின் தெரியாதவர்களுக்கோ, சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கோ விற்பனை செய்யக்கூடாது என்றும், எவ்வித ஆபத்தும் நேராத அளவுக்கு வெடி மருந்து பொருட்களை கையாண்டு, வெடிமருந்து கிடங்குகளை பராமரிக்க வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கினார்.
இந்த ஆய்வின்போது தூத்துக்குடி ஊரக தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் நம்பிராஜ், தட்டப்பாறை காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாண்டியராஜன் உட்பட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.
தூத்துக்குடி சிறப்பு செய்தியாளர் எம் ஆத்தி முத்து

