தூத்துக்குடி. நவ.29.
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 இலவச வகுப்புகள் துவக்கவிழா நேற்று மாலை தூத்துக்குடி கின்ஸ் அகடமியில் நடந்தது.
தூத்துக்குடி போல்பேட்டையில் அமைந்துள்ள கின்ஸ் அகடமியில் தமிழக அரசு பணிக்கான இலவச வகுப்புகள் நடந்து வருகிறது. கடந்த ஏழு ஆண்டுகளாக இங்கு நடந்து வரும் இலவச பயிற்சியில் பயின்ற 500 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெற்றி பெற்று பல்வேறு அரசு பணியில் பணிபுரிந்து வருகின்றனர்.
தமிழக அரசின் காவலர் பணிக்கான தேர்வு தற்போது முடிவடைந்த நிலையில் நேற்று குரூப் 4 பணிக்கான வகுப்புகள் துவங்கப்பட்டன ஆன்லைனிலும் நேரிலும் நடக்கும் இந்த வகுப்புகளில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற துவங்கி உள்ளனர். இந்த துவக்க விழா நிகழ்சியில் அகடமி நிறுவனர் எஸ். பேச்சிமுத்து வரவேற்று பேசினார்.
தமிழக அரசின் கைத்தறி துறை முதுநிலை ஆய்வாளர் டி. ரகு தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது, நேற்று தமிழக அரசின் போலீஸ் தேர்வு நடந்து முடிந்திருக்கிறது. அதை தொடர்ந்து இன்று குரூப் 4 வகுப்புகள் துவங்கி இருக்கின்றன. நடந்து முடிந்த குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளிவரும் முன்பே அடுத்த தேர்வுக்கான வகுப்புகள் இன்று துவங்கி இருக்கின்றன. இன்னும் சுமார் ஒராண்டு காலம் கழித்து நடக்க இருக்கும் தேர்வுக்கு இப்போதே படிக்க துவங்க வேண்டுமா என்று சிலர் நினைக்கலாம். போட்டிகள் மிகவும் அதிகரித்துள்ள இந்த நாட்களில் வெற்றிபெற வேண்டுமானால் முன்கூட்டியே படிக்க துவங்குவதுதான் சரியானதாக இருக்கும். இங்கு பயின்ற 50 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் குரூப் 2 முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்று தற்போது முதன்மை தேர்வுக்காக படித்து வருகிறார்கள். குரூப் 2 தேர்வுகளில் வெற்றி பெற்ற பல்வேறு அதிகாரிகளால் அவர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.


ஒவ்வொரு தேர்வுக்கும் 20 சதவீத அளவு என்ற விகித்தில் நீங்கள் உழைத்தால் ஒரு நாளும் வெற்றிபெற முடியாது என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. அதாவது மொத்தமாக ஒரே நேரத்தில் நூறு சதவீதம் அளவுக்கு உழைக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி பெற முடியும். அதற்கு இப்போதே நீங்கள் படிக்க துவங்குவதுதான் சரியானதாக இருக்கும். ஓராண்டு காலம் முழுவதும் நூறு சதவீத உழைப்பை கொடுத்தால் அடுத்த குரூப் 4 தேர்வில் நீங்கள் வெற்றி பெறுவது உறுதி. ஆகவே நீங்கள் அனைவரும் விடா முயற்சியோடு தொடர்ந்து படித்து வெற்றி பெற வாழ்த்துகள். இவ்வாறு டி.ரகு பேசினார் விழாவில் தமிழ் பேராசிரியை முனைவர் வாசுகி;, வணிகவரித்துறை கே. கலையரசன், பள்ளி கல்வித்துறை ஆர்.சிவகுருநாதன், எஸ்.வினோத், கே.வித்யா உட்பட பல பயிற்றுனர்கள் கலந்து கொண்டனர். கின்ஸ் அகடமி மாணவியும் பயிற்றுனருமான எஸ். இலக்கியா நன்றி கூறினார்.
இந்த துவக்கவிழா தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

