தூத்துக்குடி,நவ,20
தூத்துக்குடியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த ஸ்டெர்லைட் காப்பர் ஆலை, சில அரசியல் காரணங்களுக்காக தமிழக அரசால் மூடப்பட்டது. அதனை மீண்டும் திறந்து இயக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்கமும் அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறது.
தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்கத்தின் நிறுவன
தலைவர் சந்திரன் ஜெயபால் இன்று(20.11.2022) தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்றத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ’’கொரோனா தொற்று பாதிப்பில் மக்கள் சுகாதாரம் மற்றும் பொருளாதார பாதிப்பில் இருந்து முழுமையாக இன்னும் மீளவில்லை. இந்த நிலையில் தமிழக அரசு சொத்துவரி, மின் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியிருக்கிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிப்படைந்து வருகின்றனர். ஆகையால் உயர்த்தப்பட்ட தொழில்வரி, சொத்து வரி மற்றும் மின் கட்டண உயர்வை உடனடியாக அரசு குறைக்க வேண்டும்.
அதுபோல், தென் இந்தியாவின் துறைமுக தொழில் நகரமான தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலை மீண்டும் அதன் உற்பத்தியை துவக்கவும், ஸ்டெர்லைட் ஆலையை நவீன பாதுகாப்போடு மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்கிற உத்திரவதத்துடன் தூத்துக்குடி மாநகர மக்கள் சுகாதாரம், வியாபாரம்,
வேலைவாய்ப்பு, பணபுழக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு
ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை திறக்க மத்திய, மாநில அரசுகளை தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்கம் கேட்டுக் கொள்கிறது. தவறும் பட்சத்தில் சென்னையில் ஆர்ப்பாடம் நடத்தப்படும்’’ என்றார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது
மாவட்டத்தலைவர் கே.ஏ.பி.தாளமுத்து, மாவட்ட பொருளாளர் ஏ.ஆர்.கே.முத்து, து.தலைவர் எபனேசர் எபி, மாநகர தலைவர் கே.லிங்க செல்வன், நிர்வாகிகள் ஜெயம், மந்திர மூர்த்தி, திருநெல்வேலி மாவட்ட தலைவர் நெல்லை ஆனந்தன், நிர்வாகிகள் முருகன் மற்றும் ஐயப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.
செய்தி தொகுப்பு: எம். ஆத்தி முத்து
போலீஸ் செய்தி நியூஸ்

