குப்பைகளை தீவைத்து எரித்த அருள்ராஜ் நிறுவனத்திற்கு ரூபாய் ஒரு இலட்சம் அபராதம்,திடக்கழிவு மேலாண்மை விதியினை முறையாக கடைபிடிக்க தவறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் சரண்யா அரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவரது அறிவிப்பு ; தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் சேகரமாகும் குப்பைகள் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குடியிருப்புகள் மற்றும் வனிக நிறுவனங்களை பொறுத்தவரை மக்கும் குப்பை, மறுசுழற்சி குப்பை, உயிர் நச்சுக்கழிவுகள் என பிரித்து சேகரிக்கப்பட்டு முறையாக அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.
மருத்துவமனைகளில் உருவாகும் உயிர் மருத்துவக் கழிவுகள் அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனத்தின் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 21.02.2021 அன்று எட்டையாபுரம் ரோடு பகுதியில் மேற்படி விதிமுறைகளுக்கு மாறாக அருள்ராஜ் மருத்துவமனை கழிவுகள் கொட்டி எரிப்பதாக புகார் வந்ததை தொடர்ந்து, மாநகராட்சி ஆணையர் அவர்களின் உத்தரவின் பேரில், மாநகர் நல அலுவலர் அவர்களின் தலைமையில், பொது சுகாதாரப் பிரிவு அலுவலர்களுடன் நேரில் சென்று ஆய்வு செய்ததில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திவருவதும், மருத்துவமனை கழிவுகளை முறையாக பிரித்து அப்புறப்படுத்தாமல் தீவைத்து எரித்தது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மேற்படி நிறுவனத்திற்கு ரூ.1.06 இலட்சம் (ரூபாய் ஒரு இலட்சத்தி ஆறு ஆயிரம் ரூபாய்) அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.
இந்நிலையில், பொதுமக்கள் மற்றும் வியாபார நிறுவனத்தினர் தங்களால் உருவாக்கப்படும் கழிவுகளை முறையாகப் பிரித்து மாநகராட்சி பொது சுகாதார பணியாளர்களிடம் நேரடியாக ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும் மருத்துவமனைகள் கழிவுகளை பிரித்துக் கொடுப்பதோடு உயிர் மருத்துவ கழிவுகளை உரிய முறைப்படி பிரித்து அதற்கென பிரத்தியேகமாக செயல்படும் தனியார் நிறுவனங்களின் மூலம் அகற்றப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016-ன்படி கடுமையான நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும் என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் அவர்களால் தெரிவிக்கப்பட்டது.


