நாகப்பட்டினம் அக்டோபர் 28
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கல்வி கடன் மேளாவினை மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று தொடங்கி வைத்தார். நாகப்பட்டினம் சார் ஆட்சியர் பானோத் ம்ருகேந்தர் லால் நாகபட்டினம் சட்ட மன்ற உறுப்பினர் ஜெ.முகமது ஷா நவாஸ் கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி. நாகைமாலி ஆகியோர் உடன் இருந்தனர் .
மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் பள்ளி மாணவர்களின் நலனை கருதிற்கொண்டு பல்வேறு நல்லதிட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்க நிறைய திட்டங்களை கொண்டு வருகிறார்கள். அவற்றில் உயர்கல்வி பயிலும் மாணவ மாணவிகள் எவ்வித இடையூறும் இல்லாமல் கல்வியினை தொடர வேண்டும் என்ற நோக்கத்துடன் மாவட்டத்தில் உள்ள அனைத்து தேசிய வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் பங்கு பெறும் கல்வி கடன் மேளா நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதை தொடர்ந்து இங்கு கல்வி கடன் மேளா நடைபெறுகிறது. பல்வேறு காரணங்களால் பல குடும்பங்களின் நிதிநிலை பிரச்சனையால் மாணவர்கள் உயர்கல்வியைத் தொடர முடியவில்லை. அத்தகைய மாணவர்கள் அவர்களின் கனவுகளை நிறைவேற்றுவதை உறுதி செய்ய இந்த கடன் மேளா மூலம் அவர்களுக்கு உதவ மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.



கல்வி கட்டணம் ரூபாய் 4 இலட்சத்திற்கு மேல் ஏழரை இலட்சத்திற்குள் இருக்கும் பட்சத்தில் மூன்றாம் நபர் உத்தரவாதம் அளிக்க வேண்டும். மாணவர்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் 60 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டியல் இன மாணவர்களுக்கு 55 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் . மேலும் மாணவர்கள் கவுன்சிலிங் தேர்வு நேர்காணல் மூலம் கல்லூரியில் சேர்ந்து இருக்க வேண்டும்.உரிய ஆவணங்களை மாணவ, மாணவிகள் தயார் செய்த பின் வித்யாலட்சுமி இணைய முகப்பில் பொதுவான கல்வி கடன் விண்ணப்ப படிவம் மூலம் பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். உங்கள் விண்ணப்பத்தின் மென்நகல் சம்பந்தப்பட்ட வங்கிக்கு இணையம் வாயிலாக சென்றடையும்.
மேலும் இந்த கல்வி கடன் மேளாவில் 18 வங்கிகள் கலந்துகொண்டு, சுமார் 300 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை வழங்கியுள்ளார்கள். மாணவர்கள் தங்கள் அளிக்கும் விண்ணப்பத்தினை சரிபார்த்தப்பின் தகுதியுடைய அனைவருக்கும் கல்வி கடன் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சு.ராமன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் க.செந்தில்குமார், மாவட்ட முன்னோடி வங்கி உதவி பொது மேலாளர் எபனேசர் சோபியா, அனைத்து தேசிய வங்கி மற்றும் தனியார் வங்கி மேலாளர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

