தூத்துக்குடி மநகாராட்சி நிர்வாகத்தை கண்டித்து பெண்கள் திடீர் சாலை மறியல்: பெண்கள் உட்பட 22 பேர் கைது!!
தூத்துக்குடியில் மநகாராட்சி நிர்வாகத்தை கண்டித்து மறியலில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி தாளமுத்து நகர் அருகே மாதா நகரில் ஆர்.சி., தொடக்கப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான 8 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தின் ஒரு பகுதியை பள்ளி விளையாட்டு மைதானமாக பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் இன்று காலை மாநகராட்சி அதிகாரிகள் அந்த இடத்திற்கு வேலி போடுவதற்கு வந்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பள்ளி மைதானத்திற்கு இடம் ஒதுக்கிவிட்டு, மீதி நிலத்தில் வேலி போட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
ஆனால் மாநகராட்சி நிர்வாகத்தினர் மறுக்கவே, ஆத்திரமடைந்த பொதுமக்கள், ஊர் தலைவர் லூர்து தலைமையில் மாதா நகர் மெயின் ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்தது தாளமுத்து நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 8 பெண்கள் உள்பட 22 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

