தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காணாமல் போன 61 செல்போன்கள் மீட்க நடவடிக்கை எடுத்த சைபர் குற்றப்பிரிவு போலீசாருக்கு மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பாராட்டு தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையில் உதவி ஆய்வளார் சுதாகரன், பெர்லின் பிரகாஷ், தலைமை காவலர் சுப்புராஜ், காவலர்கள் பேச்சிமுத்து, திலிப், எடிசன், புவனேஷ் மற்றும் வசந்தபெருமாள் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து விரைந்து நடவடிக்கை எடுத்து செல்போன்களை மீட்க உத்தரவிட்டார்.

அதன்படி மேற்படி சைபர் குற்றப்பிரிவு தனிப்படையினர் செல்போன்கள் எங்கெங்கு உள்ளன என்பதை அதன் ஐ.எம்.இ.ஐ எண்ணை வைத்து கண்டு பிடித்து, சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு தெரிவித்து அவற்றை பறிமுதல் செய்து ஏற்கனவே கடந்த 15.10.2020 அன்று 102 செல்போன்களும் 09.12.2020 அன்று 60 செல்போன்களும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். அதன்பிறகும் தொடர்ந்த சைபர் கிரைம் குற்ற பிரிவு தனிப்டையினர் இதனை கண்காணித்து துரிதமாக செயல்பட்டு ரூபாய் 6 லட்சம் மதிப்புள்ள 61 செல்போன்களை அதன் ஐ.எம்.இ.ஐ (IMEI) எண்ணை வைத்து கண்டு பிடித்து, அவைகளை பறிமுதல் செய்துள்ளனர்.
மேற்படி கண்டுபிடிக்கப்பட்ட செல்போன்களை, அதன் உரிமையாளர்களிடம் இன்று (12.02.2021) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ஒப்படைத்தார். பின் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில் செல்போன்களை பலர் பல்வேறு வழிகளில் தொலைத்திருக்கலாம். வங்கி விபரங்கள் போன்ற உங்களுடைய தனிப்பட்ட விபரங்களையும், புகைப்படங்களையும் செல்போனில் வைக்காதீர்கள். கவனமில்லாமல் உங்கள் செல்போன் தொலைத்து விட்டால், அது ஒரு வேளை சமூக விரோதிகள் கையில் கிடைத்து விட்டால் அதை பல்வேறு சட்ட விரோதமான காரியங்களுக்கு பயன்படுத்தக்கூடும் என்றும்,
இரு சக்கர வாகன விபத்தில் ஏற்படும் உயிரிழப்புகளில் 40 சதவீதம் ஹெல்மெட் அணியாமல் தலையில் அடிபட்டு இறந்தவர்கள்தான் அதிகம். ஆகவே இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது ஹெல்மெட் அணிய வேண்டும், நான்கு சக்கர வாகனத்தில் செல்லும்போது சீட் பெல்ட் அணியவேண்டும். சாலை விதிகளை மதித்து நடந்து விபத்துக்களை தவிர்க்க வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோபி தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ், தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து உட்பட காவல்துறை அதிகாரிகள், காவல் ஆளினர்கள் மற்றும் செல்போன் உரிமையாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

