தூத்துக்குடி மாநகராட்சியின் 19வது ஆணையராக சரண்யா அறி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக இருந்த ஜெயசீலன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் சார் ஆட்சியராக பணியாற்றி வந்த சரண்யா அறி, தூத்துக்குடி மாநகராட்சியின் புதிய ஆணையராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து தூத்துக்குடி மாநகராட்சியின் புதிய ஆணையராக நேற்று காலை அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தூத்துக்குடி மாநகராட்சியின் ஆணையராக பொறுப்பேற்பதில் மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்கிறேன். பொதுமக்கள் தங்கள் குறைகள் தொடர்பாக எந்த நேரமும் என்னை தொடர்பு கொள்ளலாம். அவர்களை சிரித்த முகத்துடன் வரவேற்பேன். தூத்துக்குடி மாநகரின் மழைநீர் வடிகால் பிரச்சனைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன்” என்றார்.

புதிய ஆணையர் சரண்யா அறி சென்னையைச் சேர்ந்தவர். தஞ்சாவூரில் பிறந்தவர். அவரது தந்தை எம்.அரிவாசகன் ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி. தாய் சத்யா பிரியா அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் ஆவார். இவரது கணவர் ஐ.பி.எஸ். விவேஷ் பி சாஸ்திரி ஆவார். சரண்யா அறி சென்னையில் உள்ள கேந்திரியா வித்யாலயாவிலிருந்து பள்ளிப் படிப்பைச் செய்தார். சென்னையின் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பத்தில் பி.டெக் முடித்துள்ளார்.
சரண்யா அறி, 2018 ஆம் ஆண்டில் இந்திய அரசின் கலாச்சார அமைச்சில் உதவி செயலாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அதன் பிறகு அம்பத்தூரில் சார் ஆட்சியராக பொறுப்பேற்றார். பின்னர் கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் துணைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். தற்போது தூத்துக்குடி மாநகராட்சியின் 19வது ஆணையராக பொறுப்பேற்றுள்ளார்.

