தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயமடைந்த 12பேருக்கு ஸ்டெர்லைட் நிறுவனம் நிதியுதவி வழங்கியுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடியில் கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையின் போது அதனை கட்டுபடுத்த போலீசார் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கிச் சூட்டில் சிலர் பாதிக்கப்பட்டனர்.
அதில், காயமடைந்தவர்களில் சிலர் உடலுறுப்புகள் பாதிக்கப்பட்டு, இயல்பாக வேலை செய்ய முடியாத நிலைக்கு உள்ளாகியதால் அவர்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இப்படியாக உடல் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக பிறரது உதவியை நாடியுள்ளனர். இருந்தபோதும் அவர்களது வாழ்வாதாரம் மேம்படவில்லை.
இந்நிலையில், காயம்பட்டு உடல் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திடும் பொருட்டு எங்களுக்கு உதவிடவேண்டும் என்று எங்கள் நிறுவனத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இதன்அடிப்படையில், பாதிக்கப்பட்ட அவர்களின் வாழ்வாதாரத்தைமேம்படுத்தும் வகையில் 12பேருக்கு தலா ரூ.2.50லட்சம் வீதம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
எங்கள் நிறுவனத்தின் மூலமாக நிதியுதவியை பெற்ற பயனாளிகள் எங்களது(ஸ்டெர்லைட்) நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துள்ளனர். எங்கள் நிறுவனம் முதற்கட்டமாக அவர்களுக்கு வழங்கியுள்ள நிதி உதவியானது அவர்களின் வாழ்க்கைக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

