தூத்துக்குடி. பிப்.8,
தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் முதல் சுப்பிரமணியபுரம் செல்லும் பிரதான சாலையில் டாஸ்மாக் மதுபான கடை துவங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நடுவைக்குறிச்சி பகுதியில் உள்ள சமூக ஆர்வலர் கே.கே.ஜோயல் தலைமையில் அப்பகுதி மக்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தனர்.
அந்த மனுவில் அவர்கள் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி தாலுகா, சுப்பிரமணியபுரம் முதல் சாயர்புரம் செல்லும் பிரதான சாலையில் டாஸ்மாக் மதுபான கடை துவங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பகுதியில் இ.இ.444 சாயர்புரம் தொடக்க வேளாண்மை கடன் சங்கம் சாயர்புரம் 628251 என்ற கூட்டுறவு வங்கிக்கு நேர்எதிரே டாஸ்மாக் மதுபான கடை அமைப்பதற்காக அவசர அவசரமாக கடை கட்டப்பட்டுள்ளது.
இப்பகுதியை சுற்றிலும் சுமார் 50 அடி தூரத்தில் தூய ரபாயேல் மனவளர்ச்சி குன்றியோருக்கான பள்ளி, தூயரபாயேல் மருத்துவமனை, ஜி.யு.போய் மகளிர் கல்லூரி, நாசரேத் திருமணடத்தினுடைய கிறிஸ்தவ ஆலயம், சாயர் நினைவு ஆதரவற்ற முதியோர் இல்லம், தூய மேரி மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் தூய மார்ட்டீன் தொடக்கப்பள்ளி ஆகியவை அமைந்துள்ளது.
டாஸ்மாக் கடை அமைப்பதற்கு கட்டப்பட்டுள்ள கட்டிடத்திற்கு அடுத்த பிளாட்டில் சுமார் 10 அடி தூரத்தில் பள்ளி மாணவ-மாணவியர்கள் விளையாடும் போப் கல்லூரி மற்றும் உயர்நிலைப்பள்ளிக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
டாஸ்மாக் மதுபான கடை அமைப்பதற்கான அரசு நிர்ணயித்துள்ள சட்டவிதிகளை மீறும் வகையில், டாஸ்மாக் கடை அமைப்பதற்காக கட்டப்பட்டு வரும் இந்த கட்டிடத்தின் அருகில் மகளிர் கல்லூரி, உயர்நிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளி, பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு மைதானம், மனவளர்ச்சி குன்றியோருக்கான பள்ளி, ஆதரவற்றோர்களுக்கான முதியோர் இல்லம், மருத்துவமனை மற்றும் கூட்டுறவு வங்கி என குழந்தைகள், பெண்கள், முதியோர்கள், மாணவ-மாணவியர்கள் பலர் வந்து செல்லும் இடத்தில் அவசர அவசரமாக மதுபான கடை அமைப்பதற்கு கட்டிடம் கட்டி திறப்பு விழா நடத்துவதற்கு ஆயத்தப்பணி நடைபெறுவதாக அறிகிறோம்.
அதே பகுதியில் சுமார் 1 கி.மீ தூரத்தில் காமராஜர் நகர் பகுதியில் அரசு மதுபானகடை அரசு சட்டதிட்ட விதிமுறைகளுக்குட்பட்டு நடந்து வருகிறது. அருகில் டாஸ்மாக் கடை இருந்து வரும் சூழ்நிலையில் அப்பகுதியில் மேலும் ஒரு புதிய டாஸ்மாக் கடை அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆகையால், ஐயா அவர்கள், மேற்கண்ட பகுதியில் டாஸ்மாக் கடை அமையவுள்ளதாக கூறப்படும் இடத்தை ஆய்வு செய்து, அதன் அருகில் உள்ள பொதுமக்களின் நலன் காக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். என்று தனது புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.
தமிழக அரசு தொடர்ந்து மதுபான கடைகளை மூட கொள்கை முடிவு எடுத்து எண்ணிக்கையை குறைத்து வரும் நிலையில், தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் பகுதியை சுற்றி ஏற்கனவே ஒரு மதுபான கடை இருந்து வரும் நிலையில், மேலும் ஒரு மதுபான கடையை திறக்க உள்ளதாக வரும் தகவல்களால் அந்த பகுதிமக்கள் அரசின் மீது கடும்கோபத்தில் உள்ளனர்.
மேலும் ஒரு டாஸ்மாக் கடை அமைக்க முடிவு செய்தால், சாயர்புரம் பகுதியை சார்ந்த ஆசிரியர்கள், சமூக ஆவர்வலர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் பலர் இணைந்து மிகபெரிய போராட்டம் நடத்தவும் தயாராகி வருகின்றனர்.
50அடி அருகில் பள்ளிகூடம், ஆலயம், மாணவர்கள் விளையாட்டு மைதானம் உள்ளிட்டவைகள் இருந்தும் அரசு விதிமுறைகளை மீறி புதிதாக டாஸ்மாக் கடை ஒன்றை உருவாக்கி முக்கிய புள்ளிகள் சிலர் முடிவு செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு உண்மை தகவலை மறைத்து செயல்படுவது வேதனையளிக்கிறது. இதை தடுத்து நிறுத்தாவிட்டால், நீதிமன்றம் மூலம் வழக்கு தொடர்வோம் என சமூக ஆர்வலர் கே.கே.ஜோயல் தெரிவித்தார்.

