என்னுடைய மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் ‘ஜெய்பீம்’ ”.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!
சென்னை, ஜூன், 8
தமிழ்நாடு முதலமைச்சர் . மு.க.ஸ்டாலின் net நேற்று முன்தினம் (06.06.2022) முத்தமிழ்ப் பேரவை 41-ஆம் ஆண்டு இசைவிழாவில் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி ஆற்றிய உரை :-
என்னைப் பொறுத்தவரையில், இது ஒரு வித்தியாசமான மேடையாக அமைந்திருக்கிறது. முதலமைச்சராக நான் பொறுப்பேற்றதற்குப் பிறகு பங்கெடுக்கும் முதல் இசை மேடையாக இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கிறது. அதற்காக நான் பெருமைப்படுகிறேன். இந்த விழாவிலே நான் விரும்பிப் பங்கெடுப்பதற்குக் காரணம், முத்தமிழ்ப்பேரவை என்பது முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்ட அமைப்பு. எனவே முத்தமிழ்ப் பேரவையின் சார்பில் அழைக்கிறார்கள் என்றால், என்னைப் பொறுத்தவரைக்கும் கலைஞரே என்னை அழைக்கிறார் என்கிற அந்த உணர்வோடு தான் இந்த நிகழ்ச்சியில் நான் பங்கெடுக்க வந்திருக்கிறேன்
அதிலும் குறிப்பாக, என்னுடைய பெருமதிப்பிற்குரிய அமிர்தம் அவர்கள் அழைக்கிறார்கள் என்றால், அங்கும் நான் தட்டாமல் வருவேன், ஏன் என்றால், என்னைத் தட்டிக் கொடுத்து வளர்த்தவர். தட்டிக் கொடுத்து வளர்த்தவர் என்றால் அதில் இன்னொரு பொருளும் உண்டு, அவருக்கும் தெரியும், சிரித்த உங்களுக்கும் புரியும். மிகச் சிறுவயதில் இருந்தே என் மீது தனிப்பட்ட முறையில் அக்கறை கொண்டவர் அமிர்தம் அவர்கள்.
நான் ஒரு அரசியல் இயக்கத்தின் தலைவராக, தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பணியாற்றி வருகிறேன் என்றால், என் வளர்ச்சிக்குப் பின்னால் எத்தனையோ பேருடைய வழிகாட்டுதல் இருந்திருக்கிறது. அதில் நிச்சயமாக நம்முடைய அமிர்தம் அவர்களும் இடம் பெறுகிறார் என்பதை நான் மறக்காமல் சொல்லியாக வேண்டும். அவருடைய அழைப்பை ஏற்று, இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்திருக்கிறேன். இந்த முத்தமிழ்ப்பேரவை மட்டுமல்ல, இந்த ராஜரத்தினம் கலையரங்கமும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் தான் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதும் எல்லோருக்கும் தெரியும்.
வாசலில், அரங்கின் முகப்பில் தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவச்சிலையும் அமைக்கப்பட்டிருக்கிறது. 41-ஆவது ஆண்டு விழாவை நீங்கள் கொண்டாடிக்கொண்டு இருக்கிறீர்கள். 1975-ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் அவர்களின் ஆலோசனையின்படி, இந்த முத்தமிழ்ப்பேரவை தொடங்கப்பட்டது. எந்த அமைப்பையும் உருவாக்குவது மிகவும் சுலபம். ஆனால், உருவாக்கப்பட்ட அந்த அமைப்பை தொடர்ந்து செயலாற்ற வைப்பது என்பது கடினமான பணி. எவ்வளவோ சோதனைகளுக்கிடையில், எவ்வளவோ வேதனைகளுக்கிடையில், எவ்வளவோ பிரச்சனைகளுக்கிடையில், எவ்வளவோ சங்கடங்களுக்கிடையில் இதைக் கட்டிக் காத்து, இது இன்றைக்கு கம்பீரமாக 41-ஆவது இசை விழாவை நடத்திக் கொண்டிருக்கிறது. தலைவர் கலைஞர் அவர்கள் எப்படிப்பட்ட தீர்க்கதரிசி என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாக விளங்கிக் கொண்டிருக்கிறது. இப்படி ஒரு அமைப்பை உருவாக்கி அதை நம்முடைய அமிர்தம் அவர்களின் கையில் ஒப்படைத்ததுதான்.
அமிர்தம் அவர்கள் கையில் ஒப்படைத்தால் தடையில்லாமல், தடங்கல் இல்லாமல், அதே நேரத்தில் தகுதியோடு இசை விழாக்களும் நடக்கும் என்று தலைவர் கலைஞர் அவர்கள் நம்பினார்கள். தலைவர் கலைஞர் அவர்களுக்குக் கொடுத்த அந்த வாக்குறுதியை நம்முடைய அமிர்தம் அவர்கள் நிறைவேற்றி வருகிறார் என்பதற்கு அடையாளம் தான் இந்த விழா என்பதை நான் பெருமையோடு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டு காலமாகக் கொடிகட்டிப் பறந்த அனைத்து இசை மேதைகளும் பாடிய அரங்கமாகவும்; பரிசும், விருதும் பெற்ற இடமாகவும் இந்த முத்தமிழ்ப்பேரவை இருப்பதுதான் தலைவர் கலைஞர் அவர்களது எண்ணத்திற்கு கிடைத்திருக்கக்கூடிய மாபெரும் வெற்றி.
41-ஆவது ஆண்டு விழாவை இன்று கொண்டாடி, அந்த விழாவின் மூலமாக விருதுகளைப் பெற்றுள்ள விருதாளர்கள் அனைவரையும் முதலில் உங்கள் அனைவரின் சார்பில் நானும் பாராட்ட, வாழ்த்த, போற்ற கடமைப்பட்டிருக்கிறேன்.
இயல் செல்வம் விருது – நம்முடைய இளம் இயக்குநர் த.செ.ஞானவேல் அவர்களுக்குத் தரப்பட்டிருக்கிறது. அவர் பேசுகிறபோது சொன்னார், பெரியார் தோளில் அமர்ந்த காரணத்தால் அண்ணா எந்த அளவுக்கு உயர்ந்தார், அதேபோல், அண்ணாவினுடைய தோளிலே அமர்ந்த காரணத்தால் கலைஞர் எந்த அளவுக்கு உயர்ந்தார், கலைஞருடைய தோளிலே அமர்ந்த காரணத்தால் என்னைக் குறிப்பிட்டு எந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறேன் என்று பெருமையோடு பேசினார். எனக்கு அதில் உடன்பாடு இருக்கிறதோ, இல்லையோ, நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால், என்னைப் பொறுத்தவரைக்கும் எல்லோருடைய தோளோடு தோளாக இருந்து உங்களில் ஒருவனாக நான் என்றைக்கும் இருப்பேன் என்ற உணர்வோடு இருக்கக்கூடியவன் நான் என்பதை நான் சொல்லித்தான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் இல்லை என்பதை நான் தெளிவாக உணர்ந்திருக்கிறேன். என்னுடைய மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படம் அவர் இயக்கிய ‘ஜெய்பீம்’ படம். ஆக, ஞானவேல் அவர்களுக்கு இந்த விருதை இன்றைக்கு நாம் வழங்கியிருக்கிறோம். அவருக்கு நான் விருது அளிப்பதையும் மகிழ்ச்சியாகவே கருதுகிறேன்.
‘தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்ற ஞானவேல் அவர்கள், பத்திரிகையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கியவர், பல்வேறு புத்தகங்களை எழுதியவர், மொழிபெயர்ப்பாளர், கடந்த பத்து ஆண்டுகளாக திரைத்துறையில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எனப் பணியாற்றியிருக்கக்கூடியவர்.
அந்த வரிசையில் அவரது “ஜெய்பீம்” படம் பலரது மனச்சாட்சியை உலுக்கியது. என்னுடைய அருமை நண்பர் நடிகர் சூர்யா அவர்கள் அந்தப் திரைப்படத்தைப் பார்க்க வேண்டுமென்று சொல்லி எனக்கு அழைப்பு விடுத்தார், அதைப் போய்ப் பார்த்தேன். அந்த திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, இரண்டு, மூன்று நாட்களுக்கு நான் தூங்கவேயில்லை.
சிறைச்சாலைச் சித்ரவதையை நீங்கள் அந்த சினிமாவில் பார்த்திருப்பீர்கள். ஆனால் நான் அதை உண்மையில் அனுபவித்தவன் ஓராண்டு காலம். அதனால், மற்றவர்களைவிட என்னை அந்தப் படம் கூடுதலாகப் பாதித்தது. இளம் வயதில், மிகப்பெரிய உயரத்தை அடைந்திருக்கக்கூடிய ஞானவேல் அவர்களை முத்தமிழ்ப்பேரவையுடன் இணைந்து நானும் உங்கள் அனைவரின் சார்பில் அவருக்கு என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இசைச் செல்வம் விருது – ராஜ்குமார் பாரதி அவர்களுக்குத் தரப்பட்டிருக்கிறது.
பாட்டுத் திறத்தாலே இவ்வையகத்தையே கவர்ந்திருக்கக்கூடிய மகாகவி பாரதியாரின் கொள்ளுப் பேரன் அவர் என்பதே அவருக்கு கிடைத்திருக்கக்கூடிய மிகப் பெரிய பெருமை. பாரதியாருக்கும் பாடுவதில் பெரும் விருப்பம் இருந்தது. ஆனால் அவர் முழுமையாக அந்தப் பணியைச் செய்யவில்லை. ஆனால், ராஜ்குமார் பாரதி வடிவத்தில் அந்த ஆசையை பாரதியார் அவர்கள் நிறைவேற்றிக் கொள்வதாக அது அமைந்திருக்கிறது.
ஐந்து வயதில் இசையைக் கற்றவர். இன்று இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் சென்று இசைக் கச்சேரிகளை நடத்துபவராக உயர்ந்து நிற்கிறார். பல்வேறு மொழித் திரைப்படங்களில் பாடியிருக்கிறார். பாரதியின் பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார். இவர் பெறாத விருதே இல்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு பெயரும், பெருமையும் பெற்றுள்ள ராஜ்குமார் பாரதியை மனதார நான் பாராட்டுகிறேன். உங்கள் அனைவரின் சார்பில் அவருக்கு என்னுடைய வாழ்த்துகளைச் சொல்ல விரும்புகிறேன்.

