தூத்துக்குடிக்கு இன்று வருகை தந்த திமுக தலைவர் மு க ஸ்டாலின் கூட்ட மேடையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கீதாஜீவனின் சிறப்பான செயல்பாடுகள் குறித்தும், கூட்ட ஏற்பாடு மிக அருமையாக செய்திருப்பதாகவும் புகழ்ந்து பேசினார்.
மேலும் அவர் பேசியதாவது:
‘பெண் சிங்கம்‘என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அதேபோல் இவர் கழகத்திற்கு கிடைத்து இருக்கும் வீராங்கனையாக இந்த மாவட்டக் கழகத்தின் செயலாளராக இருந்து நம்முடைய சகோதரி கீதாஜீவன் அவர்கள் பொறுப்பேற்றுப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு பழமொழி உண்டு, ‘அப்பாவிற்கு பிள்ளை தப்பாமல் பிறக்கும் பிள்ளை’ என்று சொல்வார்கள். ஆனால் ‘அப்பாவிற்குப் பெண் தப்பாமல் பிறந்திருக்கிறது’ என்று அதனை மாற்றிச் சொல்ல வேண்டும். அவரைப் பாராட்டும் அதே நேரத்தில் அவருக்குத் துணை நின்ற அத்தனை கழக நிர்வாகிகளுக்கும், தோழர்களுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

எல்லா இடங்களிலும் இதே போலக் கூட்டத்தை நடத்திக் கொண்டு வருகிறேன். ஆனால், இங்கே குண்டூசி போட்டால் கூட சத்தம் வரும் அளவுக்கு அவ்வளவு அமைதியாக, கட்டுப்பாடாக நீங்கள் உட்கார்ந்திருக்கும் காட்சியைப் பார்க்கும் போது, சகோதரி கீதாஜீவன் சொன்னது போல இந்த மாவட்டத்தின் எல்லா தொகுதிகளிலும் நாம் தான் வெற்றி பெறப்போகிறோம் என்பதற்கு இது ஒரு அடையாளமாக இருக்கிறது.
இது நிகழ்ச்சியா அல்லது பெரிய மாநாடா என்று சந்தேகப்படும் அளவிற்கு நீங்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டிருக்கிறீர்கள். இந்த நிகழ்ச்சியை இவ்வளவு சிறப்பாக இந்த மாவட்டக் கழகத்தின் செயலாளர் – முன்னாள் அமைச்சர் – சட்டமன்ற உறுப்பினர் – அருமைச் சகோதரி கீதாஜீவன் அவர்கள் எழுச்சியோடு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
இவ்வளவு எழுச்சியாக, உணர்ச்சியாக இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கும் சகோதரி கீதா ஜீவன் அவர்களை உங்கள் அனைவரின் சார்பில் – தலைமைக் கழகத்தின் சார்பில் என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன், இவ்வாறு பேசினார்.

