தூத்துக்குடி மாவட்டத்தில் 15 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.75 இலட்சம் மதிப்பில் பண்ணை இயந்திரங்களை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மீன்வளம் – மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் 15 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.75 இலட்சம் மதிப்பில் பண்ணை இயந்திரங்களை இன்று (16.04.2022) வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் கூட்டுப்பண்ணைத் திட்டம் 2021-22ம் ஆண்டில் ஒரு குழுவிற்கு 20 விவசாயிகளை உள்ளடக்கிய 75 உழவர் ஆர்வலர் குழுக்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் 15 உழவர் உற்பத்தியாளர்கள் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு குழு ஒன்றிற்கு ரூ.5 இலட்சம் தொகுப்பு நிதியாக பண்ணை இயந்திரங்கள் வாங்குவதற்காக வழங்கப்படுகிறது. இவ்வாறு 15 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.75 இலட்சம் தொகுப்பு நிதி வழங்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஆழ்வார்திருநகரி வட்டாரத்தில் இராஜபதி கிராமத்தில் 5 உழவர் ஆர்வலர் குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டு ஒரு உழவர் உற்பத்தியாளர் குழுவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்குழுவிற்கு பண்ணை இயந்திரங்கள் வாங்கிட தொகுப்பு நிதியாக ரூ.5 இல்சம் வழங்கப்பட்டு விசை உழவு இயந்திரங்கள் 3 எண்ணம் ரூ.5.97 இலட்சம் மதிப்பில் வாங்கப்பட்டு உள்ளது.
நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் செல்வகுமார், வேளாண்மை இணை இயக்குநர் முகைதீன், வேளாண்மை துணை இயக்குநர் ஜெயசெல்வின் இன்பராஜ், ஓட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜா, முக்கிய பிரமுகர் உமரிசங்கர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

