நாகை அடுத்த கீழ்வேளுரில் நகர்புற வேலைவாய்ப்பு திட்ட பணியினை துவக்கிவைத்து நலத்திட்ட உதவிகள் அமைச்சர் வழங்கினார்.
நாகை மார்ச் 26
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் தனியார் திருமண அரங்கத்தில் தமிழ்நாடு நகர்புற வேலைவாய்ப்பு திட்டப்பணி தொடக்க விழாவினை மாண்புமிகு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் 25ம் தேதி தொடங்கி வைத்து, 36 பயனாளிகளுக்கு ரூ.11,97,300 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், தமிழ்நாடு தாட்கோ கழக தலைவர் மதிவாணன், கீழ்வேளுர் எம்.எல்.ஏ நாகை மாலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்
அப்போது அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது :
நாகை மாவட்டம், கீழ்வேளுர் பேரூராட்சி பகுதியில் உள்ள அடிதட்டு மக்களின் துன்பங்களை போக்குகின்ற வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் ஏழை எளிய மக்களின் துயர் துடைக்கும் வகையில் மக்களை தேடி எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் நம் அரசு செயல்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து நம் மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. இந்தவிழாவில் சமூக நலத்துறை சார்பில் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் தலா ரூ.50ஆயிரம் வீதம் 10 பயனாளிகளுக்கு உதவி தொகையினையும், மாற்றுத் திறனாளி நலத்துறை சார்பில் ரூ.2,36,550 மதிப்பீட்டில் 3 மாற்றுத்திறனாளிக்கு பெட்ரோல் ஸ்கூட்டரும், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ரூ.1,60,500 மதிப்பீட்டில் முதியோர், இறப்பு, மாற்றுத்திறனாளி போன்ற 10 பயனாளிகளுக்கு உதவி தொகையினையும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைசார்பில் ரூ.12,250 மதிப்பீட்டில் 5 பயனாளிகளுக்கு பண்ணைக் கருவிகளையும், வருவாய் துறை சார்பில் ரூ.2,88,000 மதிப்பீட்டில்; 8 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா என மொத்தம் ரூ.11,97,300 மதிப்பீட்டில் 36 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு நகர்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நாகப்பட்டினம் மாவட்டத்தில் முதல் பேரூராட்சியாக கீழ்வேளுர் முதல்நிலை பேரூராட்சிக்கு 75,00,000 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் நீர் நிலைகள் ஆழப்படுத்துதல், தூர்வாரும் பணி மேற்கொள்ளுதல், நடைபாதை அமைத்தல், பூங்காவில் சுற்றுச்சூழல் அமைத்தல், குளம் சுற்றியுள்ள முட்செடிகளை அகற்றுதல் போன்ற பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற உள்ளன. ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் நகர்புற பேரூராட்சிகளில் நகர்புற வேலை வாய்ப்பு திட்டம் தொடங்கப்படும் என மாண்புமிகு முதலமைச்சர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து நம் மாவட்டத்தில் முதலாவதாக கீழ்வேளுர் பேரூராட்சியில் நகர்புற வேலைவாய்ப்பு திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது.
கீழ்வேளுர் பேரூராட்சி பகுதிகளில் 2,151குடும்பங்கள் கணக்கெடுப்பு செய்யப்பட்டுள்ளது. இதில் 1,613 குடும்பங்கள் நகர்புற வேலைவாய்ப்பு திட்டத்தில்; பணி செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார்கள். அதில் 1,035 குடும்பங்களுக்கு வேலை செய்வதற்குரிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள குடும்பங்களுக்கு வேலை செய்வதற்குரிய அடையாள அட்டைகள் விரைந்து வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும். நகர்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் 1 நாளைக்கு ரூ.300 ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்கள் பயன் பெறும் அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக பெண்கள் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்தியாவிலேயே தமிழ்நாடு கல்வி, பொருளாதாரம் போன்ற பல்வேறு துறைகளில் வளர்ந்த மாநிலமாக சிறந்து விளங்குகிறது. பெண்களுக்கு மகளிர் சுய உதவிக்குழு கடன், அரசு வேலைவாய்ப்பு, இலவச பேருந்து பயணத் திட்டம், 33சதவீதம் பெண்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடக் கூடிய வாய்ப்பு, ஆண்களுக்கு நிகராக பெண்கள் சட்டங்களை கொண்டு வந்து சமுதாயத்தில் உயர்ந்த நிலைக்கு உயர்த்திய பெருமை முத்தமிழ் அறிஞர் கலைஞர் மற்றும் தமிழக முதலமைச்சர் அவர்களையே சேரும்.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் உயர்கல்வி படித்தவர்கள் அதிகம் உள்ளனர். மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் 52சதவீதம் உயர் கல்வி பயின்றவர்கள் அதிகமாக உள்ளனர். இன்னும் அதிகபடுத்துகிற வகையில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயிலும் பெண்களுக்கு நிதிநிலை அறிக்கையில் சிறப்பான திட்டத்தை அறிவித்திருக்கிறார். உயர் கல்வி பயிலும் மகளிர்க்கு ரூ.1,000 உதவித் தொகை திட்டம், 10ஆம் வகுப்பிற்கு பிறகு தொழில் பயிற்சி பள்ளி, பாலிடெக்னிக் கல்லூரி பயிலும் மாணவ மாணவியருக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் முதல்முறையாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் 6 லட்சம் மாணவிகள் உயர்கல்வி பெறக்கூடிய வாய்ப்பை பெற்றிருக்கிறார்கள். முதல் வகுப்பிலிருந்து முதுநிலை வகுப்பு வரை இலவச கல்வியை தந்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் என தெரிவித்துக் கொள்கிறேன். முதலமைச்சர் அவர்கள் தமிழகத்தில் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக இன்று துபாய், அபுதாபி போன்ற நாடுகளுக்கு சென்று முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் அதிகமான தொழிற்சாலையை நிறுவி உற்பத்திதிறனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். கீழ்வேளுர் பேரூராட்சியில் சாலை வசதிகள், தண்ணீர் வசதிகள், ஏழை எளிய மக்களுக்கான வீட்டு வசதிகள் போன்ற வசதிகளை ஏற்படுத்தி தரப்படும். கீழ்வேளுர் பேரூராட்சியில் வேளாண்மை கல்லூரி 125 ஏக்கர் இடம் தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 75 மாணவர்களுடன் குருக்கத்தி ஆசிரியர் பயிற்சி பள்ளி மையத்தில் வேளாண்மை அறிவியல் கல்லூரி தொடங்க இருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
விழாவில் கீழ்வேளுர் ஒன்றியக் குழு தலைவர் வாசுகி நாகராஜன், கீழ்வேளுர் செயல் அலுவலர் சரவணன் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தனபால், வட்டார ஆத்மா குழு தலைவர்கள் கோவிந்தராசன், பழனியப்பன், அட்சயலிங்கம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.


