அரசு மருத்துவமனைக்கு அவசர கால ஆம்புலன்ஸ்கள் போக்குவரத்து தடையின்றி வந்து செல்வதற்கு துரித நடவடிக்கை..
மேயர் என்.பி ஜெகன் அதிரடி
நோயாளிகள், பொதுமக்கள், சமூகஆர்வலர்கள் பாராட்டு..
தூத்துக்குடி, மார்ச், 23
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தினம்தோறும் மாநகர பகுதிகளையும், மாநகரில் நடைபெற்றுவரும் பாதாள சாக்கடை, சாலை அமைத்தல், ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் உள்ளிட்ட பணிகளை பார்வையிட்டும், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை துரிதமாக செய்து கொடுத்தும் வருகிறார்.
இந்நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் பிரதான நுழைவு வாயிலில் இருந்து மருத்துவமனைக்கு உள்ளே ஆம்புலன்ஸ்கள் வந்து செல்வதில் இடையூறுகள் நிலவி வருவதாக நோயாளிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மத்தியில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மருத்துவமனை வளாகத்தில் ஆங்காங்கே போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்படும் இருச்சக்கர வாகனங்களால் மருத்துவமனைக்கு வந்து செல்லும் நோயாளிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாக சொன்னார்கள். அதற்கு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முடிவு செய்த மேயர், மாநகராட்சி அதிகாரிகள் குழுவோடு இன்று அங்கு சென்று நேரடியாக ஆய்வு செய்தார்.
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் நேரு, மருத்துவமனையின் உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி, மாநகர போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் மயிலேறும்பெருமாள், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் ஆகியோருடன் ஆலோசனை செய்தார்.
அதனைத் தொடர்ந்து, மருத்துவமனை வளாகத்தில் போக்குவரத்திற்கு இடையூறாகவும், உள்ளே செல்லும் வழித்தடப்பகுதிகளிலும் இருச்சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டு பைக், சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை மாற்று இடத்தில் நிறுத்தி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
மேலும், தூத்துக்குடி – பாளை ரோடு விவிடி சிக்னல் சந்திப்பில் இருந்து மருத்துவமனை பிரதான நுழைவு வாயில் வழியாகவும் மற்றும் ஆம்புலன்ஸ்கள் சென்று வருவதற்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்டு புழக்கத்தில் இல்லாமல் இருந்த வழித்தடம் ஆகியவையும் புதுபிக்கப்பட்டு இந்த இரண்டு வழித்தடங்கள் வழியாகவும் ஆம்புலன்ஸ்கள் எந்தநேரமும் தடையின்றி வந்து செல்ல துரிதமாக ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவசர கால ஆம்புலன்ஸ்கள் தடையின்றி வந்து செல்வதற்கு துரித நடவடிக்கை எடுத்த மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமிக்கு நோயாளிகள், பொதுமக்கள், சமூகஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
ஆய்வின்போது, மாநகராட்சி அதிகாரிகள், மருத்துவமனை பணியாளர்கள், திமுக பிரமுகர்கள் மற்றும் கவுன்சிலர்கள் உடனிருந்தனர்.
தூத்துக்குடி மாநகராட்சியில் மக்கள் பிரச்சனை எதுவாக இருந்தாலும் பொதுமக்கள் வாட்ஸ் அப்பில் மூலம் தகவல் தெரிவிக்கலாம் என மேயராக பொறுப்பேற்ற அன்று ஜெகன் பெரியசாமி தெரிவித்திருந்தார். தற்போது அந்த நம்பருக்கு பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் வந்த வண்ணம் இருக்கிறது. மேயர் இதுகுறித்து உடனடியாக நேரடியாக ஆய்வு செய்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் .இதனை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலரும் மேயரின் சிறந்த பணிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
செய்தி தொகுப்பு
சண்முகபுரம் தங்கமணி

