தமிழக பள்ளிக் கல்வி வரலாற்றிலேயே இது மிக முக்கிய உத்தரவு.. தமிழக பெற்றோர்களுக்கு நற்செய்தி.. அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி!!
சென்னை, மார்ச், 12
சென்னை: பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி தந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் சொன்னதாவது:
பள்ளி மேலாண்மை குழுவின் செயல்பாடுகள், அதில் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களின் பங்கேற்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் மார்ச் 20ம் தேதி நடைபெறுகிறது.
அரசு பள்ளிகளின் மேம்பாட்டுக்காக இந்த விழிப்புணர்வு கூட்டம் நடக்க உள்ளது.. இதில் கிட்டத்தட்ட 52 லட்சம் பெற்றோர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.. தமிழக பள்ளிக் கல்வி வரலாற்றிலேயே இது மிக முக்கிய நிகழ்ச்சி ஆகும்.. அரசு பள்ளிகளில் இயங்கும் பள்ளி மேலாண்மைக் குழுக்களுக்கு புதிய உறுப்பினர்கள் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள்… இதில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்’ என்றார்.
முன்னதாக பள்ளிக்கல்வி துறை சார்பில் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக் கல்வி ஆணையர் கே.நந்தகுமார் இந்த சுற்றறிக்கையை அனுப்பியிருக்கிறார்.. அதில் உள்ளதாவது: ‘அரசுப் பள்ளிகளின் முன்னேற்றம் மற்றும் அதன் செயல்பாடுகளை மேலாண்மை செய்வதற்காகவும், இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படியும் பள்ளி மேலாண்மைக் குழு ஏற்படுத்தப்பட்டது.
மறுகட்டமைப்பு:
அரசு வழிகாட்டுதலின் அடிப்படையில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் (எஸ்எஸ்ஏ) கீழ் அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் வளர்ச்சியில் இக்குழு முக்கியப் பங்கு வகிக்கிறது. பள்ளிக் கல்வித்துறை அரசாணையின்படி, பள்ளி மேலாண்மைக் குழுவை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மறுகட்டமைப்பு செய்வது அவசியம். அதன்படி அனைத்து பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழுவை மறுகட்டமைப்பு செய்வதற்குத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்
விழிப்புணர்வு
மேலும், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களிடம், பள்ளி மேலாண்மைக் குழு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மார்ச் 20 ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பள்ளி மேலாண்மைக்குழு மற்றும் அனைத்து பெற்றோர் கூட்டத்தை அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் முன்னிலையில் நடத்த வேண்டும்.
பெற்றோர்களின் பங்கு
இக்கூட்டத்தில் பள்ளி மேலாண்மைக் குழுவின் அமைப்பு, அதன் செயல்பாடுகள், பள்ளி மேலாண்மைக் குழுவின் முக்கியத்துவம், பெற்றோர்களின் பங்கு மற்றும் அடுத்து நடைபெறும் பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு நிகழ்வில் கலந்து கொள்வதின் முக்கியத்துவம் ஆகியவற்றை பெற்றோருக்கு எளிய முறையில் தலைமை ஆசிரியர்கள் எடுத்துரைக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

