நாகையில் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கு
வேதாரண்யம் பிப் 17
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சி மொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் நடந்தது. தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் முனைவர் அன்பரசி வரவேற்றார்.
தமிழ் வளர்ச்சித் துறைசார்பில் அரசு பணியாளர்களுக்கு ஆட்சி மொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் 15 மற்றும் 16 ஆகிய இரண்டு நாள்கள் நடந்தது. ஆட்சிமொழிப் பயிலரங்கினைத் தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையுரை ஆற்றினார்.
அவர் பேசும்போது தமிழ்மொழியின் சிறப்புகள் குறித்தும் உலகளவில் தமிழுக்கும், தமிழருக்கும் உள்ள மாண்புகள் குறித்தும் எடுத்துரைத்தார். தன் குழந்தைகளும் தமிழை முறைப்படி கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்திருப்பதாக கூறினார். அரசுப் பணியாளர்கள் அரசின் ஆணைப்படி குறிப்புகள், வரைவுகள் மற்றும் ஆணைகளில் தமிழைப் பிழையின்றி பயன்படுத்துமாறு அறிவுறுத்தினார். இப்பயிலரங்கிற்குப் பின்பு தானும் இன்னும் சிறப்பாக தமிழைப் பேச்சிலும், எழுத்திலும் பயன்படுத்துவதற்கான உறுதி ஏற்பதாக கூறினார். பயிற்சி பெற்ற பணியாளர்கள் தாங்கள் பெற்ற கருத்துகளை தங்கள் அலுவலகத்தைச் சார்ந்தவர்களுக்கும் எடுத்துரைக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்வில் தமிழ் வளர்ச்சி இயக்கக உதவி இயக்குநர் (நிர்வாகம்) பாரதி, கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் இராசா, திருப்பூண்டி வடக்கு அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் நல்லாசிரியர் துரைக்கண்ணன், குற்றவியல் பிரிவு மேலாளர் இராஜசேகரன் ஆகியோர் கருத்துரை ஆற்றினார்கள். நிகழ்வின் நிறைவாக தமிழ் வளர்ச்சித் துறை உதவியாளர் லியாகத்அலி நன்றி கூறினார்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்,
வேதாரண்யம்.

