நாகை மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி சிறப்பாக செயல்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் தெரிவித்தார்
வேதாரண்யம் பிப் 16
நாகப்பட்டினம் மாவட்டத்தில் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் 2,358 மையங்களில் 30,520 மாணவர்கள் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர் என மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்றுப் பரவல் சார்ந்த பொது முடக்கக் காலங்களில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இழப்புகளை குறைத்திடும் வகையில் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை மூலமாக மாநிலம் முழுவதும் தமிழகஅரசின் 100 சதவீத நிதிபங்களிப்புடன் இல்லம் தேடி கல்வி என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் விழுப்புரம் மாவட்டத்தில் 27.10.2021 முதலியார் குப்பம் என்ற குடியிருப்பில் இல்லம் தேடி கல்வி மையம் என்ற மகத்தான திட்டத்தை முதன் முதலாக தொடங்கி வைத்தார். பள்ளி நேரத்தைத் தவிர, மாணவர்கள் வசிப்பிடம் அருகே சிறிய குழுக்கள் மூலம் தன்னார்வலர்களின் பங்கேற்புடன் மாணவர்களுக்குக் கற்றல் வாய்ப்புகளை வழங்குதல். மாணவர்கள் பள்ளிச் சூழலின் கீழ் ஏற்கனவே பெற்றுள்ள கற்றல் திறன்களை இல்லம் தேடிக் கல்வி திட்டச் செயல்பாடுகளின் வாயிலாக மீண்டும் வலுப்படுத்துதல் இவற்றின் நோக்கமாகும்.
அதனைத் தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டம் பாலையூர் ஊராட்சி அழிஞ்சமங்களம் கிராமத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 6 ஒன்றியங்களில் இதுவரை இல்லம் தேடி கல்வியில் தொடக்க நிலையில் (1 முதல் 5ஆம் வகுப்புவரை) 1,342 மையங்களும் உயர் தொடக்க நிலையில் (6 முதல் 8ஆம் வகுப்புவரை) 1,016 மையங்களும் என மொத்தமாக 2,358 மையங்கள் இதுவரை தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இல்லம் தேடி கல்வி மையங்களில் பயின்று வருகின்றனர்.
பள்ளி மேலாண்மை குழு மூலம் தன்னார்வலர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு திறனறிவுத் தேர்வுமதிப்பெண்கள் மற்றும் குழு விவாத பங்களிப்பு விவரங்கள் மூலம் தேர்வடைந்த தன்னார்வலர்களுக்கு 4 மாதங்களாக 2 நாட்கள் வீதம் பயிற்சிகள் தொடங்கப்பட்டு வருகிறது. பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் மாணவர்களின் குடியிருப்புகளுக்கு அருகாமையில் உள்ள இல்லம் தேடி கல்வி மையங்கள் தொடங்கப்பட்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் பணியில் 2,358 தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர் எனமாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்தார்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்,
வேதாரண்யம்.

