ஆரியங்காவில் சந்தன மரம் வெட்டியதற்காக இலஞ்சியை சேர்ந்த ரயில்வே ஊழியர் கைது செய்யப்பட்டார். செங்கோட்டையை சேர்ந்த மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
தமிழக கேரள மாநில எல்லைப் பகுதியான ஆரியங்காவில் கேரள அரசுக்கு சொந்தமான சந்தன மரக் காடுகள் உள்ளன. இதனை இங்கு உள்ள வனத்துறை அதிகாரிகள் பாதுகாத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பழைய ஆரியங்காவு ரயில் நிலையம் அருகே சந்தன மரங்கள் வெட்டி திருடப்பட்டது. இதுகுறித்து கேரள வனத்துறையினர் வெட்டப்பட்ட மரத்தின் அருகே வேலை பார்த்துக்கொண்டிருந்த ரயில்வே ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இன்று வனத்துறையினர் நடத்திய விசாரணையில் வெட்டிய சந்தன மரம் ஆரியங்காவு ரயில்வே மேம்பாலத்தில் அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சந்தன மரத்தை வெட்டி பதுக்கிய தென்காசி மாவட்டம் இலஞ்சியை சேர்ந்த சித்தை (36) என்பவர் கைது செய்யப்பட்டார். .அவரது நண்பரான செங்கோட்டையை சேர்ந்த முருகன் என்பவரை ஆரியங்காவு வனத்துறையினர வலைவீசி தேடி வருகின்றனர். இவ்விருவரும் ஆரியங்காவில் ரயில்வே டிராக் மேனாக வேலை பார்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட சித்த என்பவர் வனத்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். தென்மலை ரேஞ்ச் அதிகாரி பி.ஆர்.ஜெயன், பிரிவு வனத்துறையினர் கிரிஷ்குமார், வில்பிரட், மது, பீட் பாரஸ்டர் ஷ்யாம், ரவிச்சந்திரன், துளசி, சுனிதா தலைமையில் சந்தன மரங்கள் வெட்டப்பட்டது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

