தூத்துக்குடியில் பெண்ணிடம் 3 பவுன் செயினை பறித்த மர்ம நபர்கள் இருவரைதேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி ஆரோக்கியபுரம், பாக்கியநாதன் விளையைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் மனைவி விமலா தேவி (38). இவர் தனது வீட்டருகே மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று அவர் கடையில இருந்தபோது அங்கு வந்த 2பேர், அவரிடம் சிகரெட் கேட்டுள்ளனர். அப்போது அதில் ஒருவன் திடீரென விமலா தேவி கழுத்தில் கிடந்த 3 பவுன் செயினை பறித்துள்ளான்.
பின்னர் இருவரும் கண்ணிமைக்கும் நேரத்தில் பைக்கில் தப்பிச் சென்றுவிட்டனர். இதையடுத்து விமலா தேவி கூச்சலிடவே அப்பகுதி மக்கள் திரண்டனர். ஆனாலும் மர்ம நபர்களை பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சப் இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளில் அடிப்படையில் போலீசார் நகை பறித்த கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

