மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரூபாய் 21 கோடி மதிப்புள்ள 21 கிலோ ஹெராயின் வைத்திருந்த 6 பேர் கைது – 21 கிலோ ஹெராயின் பறிமுதல் – இந்த ஆண்டு இதுவரை கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை செய்த வழக்கில் ஈடுபட்ட 22 பேர் உட்பட 195 பேர் குண்டர் சட்டத்தில் கைது – எதிரியை கைது செய்த தனிப்படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டு.
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா போன்ற போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தல் போன்றவற்றை தடுப்பதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவுப்படி அந்தந்த உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைத்து தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மேற்பார்வையில் நகர காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சம்பத் தலைமையில் தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயபிரகாஷ், மத்தியபாகம் உதவி ஆய்வாளர் முருகபெருமாள், தூத்துக்குடி நகர உட்கோட்ட தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ஞானராஜ், மத்தியபாகம் தனிப்பிரிவு தலைமை காவலர் சுப்பிரமணியன், தலைமை காவலர் பென்சிங், முதல் நிலை காவலர்கள் மாணிக்கராஜ், சாமுவேல்ராஜ், மகாலிங்கம், காவலர்கள் திருமணிராஜன், செந்தில்குமார் மற்றும் முத்துபாண்டி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டூவிபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்த 1) அன்சார்அலி (26), த/பெ. மைதீன், அண்ணாநகர், தூத்துக்குடி , 2) மாரிமுத்து (26), த/பெ. முனியசாமி, யோகீஸ்வர் காலனி, தூத்துக்குடி மற்றும் 3) இம்ரான்கான் (27), த/பெ. ஷாஜகான், டூவிபுரம் தூத்துக்குடி ஆகிய 3 பேரை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் கையில் வைத்திருந்த பையில் போதை தரும் பொருளான ஹெராயின் இருந்தது தெரியவந்தது. உடனே மேற்படி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி நபரான இம்ரான்கான் வீட்டை சோதனை செய்ததில் அவரது வீட்டில் இருந்த 3 பாக்கொட்டுகளில் இருந்த 162 கிராம் ஹெராயினை கைப்பற்றி, அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் 4) அந்தோணி முத்து (42), த/பெ. சவரிமுத்து, ரோஸ்நகர், தருவைகுளம், தூத்துக்குடி என்பவரது வீட்டிற்கு சென்று மேற்படி தனிப்படையினர் சோதனை மேற்கொண்டதில், அவரது வீட்டிலும் 21 கிலோ ஹெராயின் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அந்தோணி முத்துவிடம் மேற்கொண்ட விசாரணையில், அவருக்கு உதவியாக இருந்தது 5) பிரேம் (எ) பிரேம்சிங் (38), த/பெ. ராஜேந்திரன், நவமணிநகர், தருவைகுளம் மற்றும் 6) கசாலி (27), த/பெ. சவுகத்அலி, பட்டினமருதூர், ஆகியோர் என்பதும் தெரியவந்தது.
உடனே தனிப்படையினர் மேற்படி எதிரிகள் அன்சார்அலி, மாரிமுத்து, இம்ரான்கான், அந்தோணிமுத்து, பிரேம் (எ), பிரேம்சிங் மற்றும் கசாலி ஆகிய 6 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து மனம் மயக்கும் போதை பொருளான ரூபாய் 21 கோடி மதிப்புள்ள 21 கிலோ ஹெராயினை பறிமுதல் செய்தனர். இது குறித்து தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி போதைபொருளை கடத்திய எதிரிகளை கைது செய்து, ஹெராயினை பறிமுதல் செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டினார்.
இந்த ஆண்டு இதுவரை கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை வழக்கில் சம்மந்தப்பட்ட 22 பேர் உட்பட மொத்தம் 195 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். மேலும் சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தல் விற்பனையில் ஈடுபடுவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்கப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

