குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் சூரசம்ஹார நிகழ்ச்சியை கடற்கரையில் நடத்தக் கோரிய வழக்கில், மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன் பட்டினத்தில் பிரசித்தி பெற்ற முத்தாரம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நடக்கும் தசரா திருவிழாவில் லட்சக் கணக்கானோர் பங்கேற்பர். திருவிழாவின்போது நேர்த்திக் கடனை நிறைவேற்றும் பக்தர்கள் விரதம் இருந்து பல்வேறு வேடங்களை அணிவர். இதையொட்டி, கடற்கரையில் புரட்டாசி மாத பவுர்ணமி அன்று சூர சம்ஹார நிகழ்ச்சி நடக்கும்.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, சூரசம்ஹார நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொள்ள இந்தாண்டு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அக். 15ம் தேதியன்று கோயில் வளாகத்திலேயே சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கும் என அறிவிக்கப்பட் டுள்ளது. அதே நேரம் பக்தர்களை அனுமதிக்காமல் கடற்கரையிலேயே சூரசம்ஹாரம் நடத்துவதால் எந்த பாதிப்பும் ஏற்படப்போவ தில்லை. எனவே, பக்தர்களின்றி கடற்கரையிலேயே சூரசம்ஹார நிகழ்ச்சியை நடத்துமாறு உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட் டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எம்.துரைச்சுவாமி, கே.முரளிசங்கர் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், “12 நாட்கள் நடக்கும் தசராதிரு விழா முழுமையாக யூடியூப் மற்றும் உள்ளூர் தொலைக் காட்சிகளில் நேரலை செய்யப்படும். கடற்கரையில் நடத்தினால், சுற்று வட்டார கிராமத்தினர் அதிகளவில் கூடுவர். இதனால் கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் கோயில் வளாகத்திலேயே நடத்த முடிவானது” என கூறப்பட்டது. இதையடுத்து மனுவிற்கு தூத்துக்குடி ஆட்சியர் மற்றும் எஸ்பி தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நவ. 1க்கு தள்ளி வைத்தனர்.

