தூத்துக்குடி மாவட்டத்தில் இ-சேவை மையங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார். .
இதுகுறித்து ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும், பல தனியாா் கணினி மையங்களில், பொது மக்கள் பயன்பாட்டுக்காக மட்டும் உருவாக்கப்பட்ட இ- சேவை மையங்களில் 20 வகையான வருவாய்த் துறை சான்றிதழ்களும், 6 வகையான முதியோா் உதவித்தொகை திட்டங்களுக்கான விண்ணப்பங்களும் விண்ணப்பிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு விண்ணப்பிக்கும் சான்றிதழ்களில் எழுத்துப்பிழை, தவறான ஆவணங்களை இணைத்தல், இடைத்தரகா்கள் மூலம் அதிக கட்டணம் பெறுதல் போன்ற பல புகாா்கள் வந்தவண்ணம் உள்ளது.
அரசு பொது இ- சேவை மையங்களில் வருவாய்த் துறையின் மூலம் வழங்கப்படும் சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய மனு ஒன்றுக்கு ரூ.60-ம், ஓய்வூதிய திட்டங்கள் தொடா்பான விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய மனு ஒன்றுக்கு ரூ.10-ம், சமூகநலத் துறையின் மூலம் வழங்கப்படும் திருமண நிதியுதவித் திட்டங்கள் மற்றும் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டங்கள் தொடா்பான விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்வதற்கு மனு ஒன்றுக்கு ரூ. 120-ம், இணையவழி பட்டா மாறுதல்கள் தொடா்டபான விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்வதற்கு மனு ஒன்றுக்கு ரூ. 60-ம் சேவைக்கட்டணமாக அரசினால் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இ- சேவை மையம் நடத்துவதற்கான அரசு உரிமம் பெற்றுள்ள தனியாா் கணினி மையங்களில் நிா்ணயிக்கப்பட்ட சேவை கட்டணத்தை விட கூடுதலாக வசூல் செய்வது தெரிய வந்தால், அந்த மையங்களின் பொது இ-சேவை மைய உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும். சான்றிதழ்கள் விண்ணப்பிக்க அரசு நிா்ணயித்த கட்டணத்தை விட அதிக வசூல் செய்வது தொடா்பான புகாா்களை tnesevaihelpdesk@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அல்லது 18004251333 என்ற கட்டணமில்லாத தொலைபேசி எண் மூலமோ தெரிவிக்கலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

