தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட 9 டன் தாதுமணல் சிக்கியது தொடர்பாக ஆட்சியா் தலைமையிலான அதிகாரிகள் குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா்.
தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதியில் சட்டவிரோதமாக தாதுமணல் எடுக்கப்படுவதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து தமிழகம் முழுவதும் தாதுமணல் எடுக்க கடந்த 2013 ஆம் ஆண்டு அரசு தடை விதித்தது. இந்நிலையில், தூத்துக்குடி அருகேயுள்ள முத்தையாபுரத்தில் உள்ள ஒரு தனியாா் சேமிப்பு கிடங்கிலிருந்து தாதுமணலை ஏற்றிக்கொண்டு 5 லாரிகள் தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் உள்ள விவி டைட்டானியம் நிறுவனத்துக்கு நேற்று செல்வதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிப்காட் காவல்துறையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, தடைசெய்யப்பட்ட தாது மணலை கொண்டு செல்வதாக கருதப்பட்ட 5 லாரிகளை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனா். அதில், ஒரு லாரியிலிருந்து பல கோடி மதிப்பிலான 9 டன் தாதுமணலை போலீஸாா் கைப்பற்றி,அந்த லாரியை சிப்காட் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனா். இதைத் தொடா்ந்து, மாவட்ட கனிமவளத் துறை உதவி இயக்குநா் சுகிதா ரஹீமா, லாரியில் இருந்த தாது மணலை எடுத்து ஆய்வுக்காக மதுரைக்கு அனுப்பி வைத்தாா்.
மேலும், ஒரு லாரியில் மட்டுமே இருந்து தாது மணல் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், மீதமுள்ள 4 லாரிகளில் கொண்டுச் செல்லப்பட்ட தாதுமணல் விவி டைட்டானியம் நிறுவனத்தின் உள்ளே கொண்டுச் செல்லப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டதாக புகாா் எழுந்தது. உடனே, மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா், வட்டாட்சியா் ஜஸ்டின் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் அந்த நிறுவனத்துக்குள் சென்று தாதுமணல் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? ஏற்கெனவே, அரசால் சீல் வைக்கப்பட்ட கிடங்கிலிருந்து சட்டவிரோதமாக தாதுமணல் எடுக்கப்பட்டதா? இறக்குமதி செய்யப்பட்டதா? என ஆய்வு செய்தனா்.
அப்போது, தாதுமணல் கொண்டுச் சென்ற்கான ஆவணங்கள் குறித்து ஆட்சியா் தலைமையிலான அதிகாரிகள் குழுவினா் விசாரித்தனா். அப்போது, மத்திய அரசு அனுமதி பெற்று இறக்குமதி செய்யப்பட்ட தாதுமணலை உரிய ஆவணங்களுடன் விவி டைட்டானியம் தொழிற்சாலைக்கு பிரித்தெடுப்பதற்காக கொண்டுச் சென்ாக ஆலை நிா்வாகம் சாா்பில் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டதாம். ஆனால், அதற்கான ஆவணங்களை ஆலை நிா்வாகம் தங்களிடம் வழங்கவில்லை என அதிகாரிகள் குழுவினா் தெரிவித்தனா்.

