தூத்துக்குடி சிவன் கோயிலில் திருமணம் நடத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் மணமக்களும், உறவினர்களும் ஏமாற்றம் அடைந்தனர்.
கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் வரும் 23 ஆம் தேதி வரை வெள்ளி சனி ஞாயிறு ஆகிய மூன்று நாள்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கக் கூடாது என அரசு உத்தரவிட்டது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் இன்று வெள்ளிக்கிழமை முதல் 3 நாள்களுக்கு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று திருமண முகூர்த்த நாள் என்பதால் தூத்துக்குடி சிவன் கோவிலில் 10க்கும் மேற்பட்ட மணமக்கள், உறவினர்களுடன் கோவிலில் குவிந்தனர். ஆனால் அரசு உத்தரவுப்படி கோவிலுக்குள் திருமணம் நடத்த அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர். ஏற்கனவே திருமணம் நடத்த அனுமதி பெற்றிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து மணமக்கள் மட்டும் கோவில் வளாகத்தில் அனுமதிக்கப்பட்டு திருமணம் செய்து கொண்டனர். உடன்வந்த உறவினர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதனால் உறவினர்களும் பக்தர்களும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

