கோவில்பட்டியில் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின்கீழ் 1934 பயனாளிகளுக்கு ரூ.5.52 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சத்யாபாமா திருமண மண்டபத்தில் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின்கீழ் கோவில்பட்டி வட்டத்திற்கு உட்பட்ட மனுக்கள் அளித்த பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் மூலம் 1934 பயனாளிகளுக்கு ரூ.5.52 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில்ராஜ், தலைமையில் இன்று (11.08.2021) நடைபெற்றது. நிகழ்ச்சியில் சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் பெ.கீதாஜீவன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழக முதலமைச்சர் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் கோவில்பட்டி பகுதிக்கு வருகை தந்த போது, கோவில்பட்டி பகுதி மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு, கோரிக்கை மனுக்களுக்கு 100 நாட்களுக்குள் உரிய தீர்வு காணப்படும் என தெரிவித்தார்கள். அதனடிப்படையில் நமது மாவட்டத்தில் பெறப்பட்ட மனுக்களில் 72 சதவீத மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்திற்கென தனி அலுவலரை நியமித்து கோரிக்கை மனுக்களை விரைந்து நிறைவேற்றுவதற்கு உத்தரவிட்டார்கள். தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்தில் இத்திட்டத்தின் மூலம் பொது மக்கள் பயன் பெற்று உள்ளார்கள்.
நமது மாவட்டத்தில் நேற்றைய தினம் தூத்துக்குடி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மனுக்கள் அளித்த 3500 பயனாளிகளுக்கு ரூ.6.67 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் இம்மனுக்களில் சாலை வசதி, குடிநீர் வசதி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, உடல் ஊனமுற்றோர் உதவித் தொகை, முதிர்கன்னி உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டைகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி, தையல் இயந்திரம், தேய்ப்பு பெட்டி, உழுந்து விதைகள், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான கடன் உதவிகள் என 1934 கோரிக்கை மனுக்களுக்கு ரூ.5.52 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் கோவில்பட்டியில் வழங்கப்பட்டுள்ளது.
சமூக பாதுகாப்பு துறையின் மூலம் 213 பயனாளிகளுக்கு ரூ.2.97 கோடி மதிப்பிலான முதியோர் உதவித்தொகைக்கான ஆணையினை, மாவட்ட வழங்கல் நிர்வாகத்தின் மூலம் 1623 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள், 53 பயனாளிகளுக்கு ரூ.5.51 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டா, 5 பயனாளிகளுக்கு ரூ.1.84 கோடி மதிப்பிலான நத்தம் நகர நிலவரித்திட்டத்தின் கீழ் நகர வீட்டுமனை பட்டாவினை, வட்டார வளர்ச்சித்துறையின் மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் இனாம் மணியாச்சி ஊராட்சியில் வடக்கு இந்திரா நகர் முதல் தெருவில் ரூ.9.40 இலட்சம் மதிப்பில் சிமெண்ட் கற்கல் மற்றும் வாருகால் அமைக்கும் பணிக்கான ஆணை, மூடுக்குமீண்டான் ஊராட்சியில் கிழக்குத் தெருவில் ரூ.3.57 இலட்சம் மதிப்பில் அச்சுக்கல் பதித்தல் பணிக்கான ஆணை,
மாவட்ட பிற்படுத்தப்பட்டோhர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் 7 பயனாளிகளுக்கு ரூ.30,315 மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரம் மற்றும் விலையில்லா தேய்ப்பு பெட்டி, வேளாண்மைத்துறையின் மூலம் ரூ.3064 மதிப்பிலான உழுந்து விதைகள், மகளிர் திட்டத்தின் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதியின் மூலம் 25 குழுக்களுக்கு ரூ.50 இலட்சம் மதிப்பலான கடன் உதவிகள் ஆகிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை பெருக்கும் வகையில் பல்வேறு நிறுவனங்களுடன் பேசப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிப் பாதையில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழக முதல்வர் தேர்தல் அறிக்கையில் தெரிவத்தபடி 100 நாட்கள் முடிவடைகிறதுக்கு முன்பே குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண உதவித்தொகையாக ரூ.4000 மற்றும் 14 வகையான மளிகைப்பொருட்கள், பெண்களுக்கு நகர்புற பேரூந்துகளில் இலவச பயணம், மக்களைத்தேடி மருத்துவம் என தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார்கள். கொரோனா மூன்றாவது அலையினை எதிர்கொள்வதற்கு தமிழக அரசு தயராக உ;ளது. பொது மக்கள் அனைவரும் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடித்து, முகக்கவசம் அணிந்து கொரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். பொது மக்களுக்கு இந்த அரசு அனைத்து விதத்திலும் உதவும் அரசாக செயல்படும் என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் சங்கரநாரயணன், மகளிர் திட்ட திட்ட அலுவலர் பிச்சை, மாவட்ட வழங்கல் அலுவலர் அபுல்காசிம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலர் பிரமநாயகம், கோவில்பட்டி ஒன்றியக்குழுத் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் மணிகண்டன், கோவில்பட்டி வட்டாட்சியர் அமுதா, வட்டாரவளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், பாலசுப்பிரமணியன், மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

