தூத்துக்குடியில் “உங்கள் தொகுதியில் முதல்வர்” திட்டத்தின்கீழ் பல்வேறு துறைகளின் மூலம் 3500 பயனாளிகளுக்கு ரூ.6.67 கோடி நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பெ.கீதாஜீவன் வழங்கினார்.
தூத்துக்குடி அறிஞர் அண்ணா மண்டபத்தில் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின்கீழ் பல்வேறு துறைகளின் மூலம் 3500 பயனாளிகளுக்கு ரூ.6.67 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தலைமையில் இன்று நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சியில் சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் பெ.கீதாஜீவன் தெரிவித்ததாவது: தமிழக முதலமைச்சர் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள நபருக்கு அனைத்து நலத்திட்ட உதவிகளும் கிடைக்க வேண்டும் என்பதற்காக உங்கள் தொகுதியில் திட்டத்திற்கென தனி அலுவலரை நியமித்து திட்டத்தின் அன்றாட நிகழ்வினை தொடர்ந்து கண்காணித்து உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில் விண்ணப்பித்த தகுதியுள்ள அனைத்து ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் கிடைக்க வேண்டும் என்பதில் தமிழக முதலமைச்சர் உறுதியாக உள்ளார்கள்.
பொதுமக்களின் அடிப்படை வசதியான குடிநீர் வசதி, சாலை வசதி, பட்டா மாறுதல், வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை, மகளிர் திட்டத்தின் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி, வேளாண் துறை மூலம் நலத்திட்ட உதவிகள், மாற்றுத்திறனாளிகள் துறை மூலம் நலத்திட்ட உதவிகள், தெருவிளக்கு என பல்வேறு மனுக்களுக்கு இன்றைய தினம் நடவடிக்கை எடுக்கப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலம் 3500 பயனாளிகளுக்கு ரூ.6.67 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில் முதல் முறையாக மனுக்கள் மீது நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின்கீழ் சமூக பாதுகாப்பு துறையின் மூலம் 221 பயனாளிகளுக்கு ரூ.26.52 லட்சம் மதிப்பிலான முதியோர் உதவித்தொகைக்கான ஆணையினை, மாவட்ட வழங்கல் நிர்வாகத்தின் மூலம் 2985 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள், 36 பயனாளிகளுக்கு ரூ.16 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டா, 57 பயனாளிகளுக்கு ரூ.5.45 கோடி மதிப்பிலான குடிசை மாற்று வாரிய துறையின் மூலம் குடிசை மாற்று வாரிய வீடுகள், மகளிர் திட்டத்தின் மூலம் 180 பயனாளிகளுக்கு ரூ.91 லட்சம் மதிப்பில் மகளிர் சுய உதவி குழு வங்கி கடன்,
வேளாண்மை துறையின் மூலம் அட்மா திட்டத்தின் கீழ் சிறந்த விவசாயிக்கான விருது என்ற இனத்தின் கீழ் ஒரு விவசாயிக்கு ரூ.10,000, உமரிக்கோட்டை உழவர் ஆர்வலர் குழுவிற்கு ஆதார நிதியாக ஒரு விவசாயிக்கு ரூ.10000, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் 1 பயனாளிக்கு ரூ.12799 மதிப்பிலான திறன்பேசி ஆகிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் பொதுமக்களின் குரலுக்கு செவி சாய்க்கும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்கள். பெண்கள், குழந்தைகளை பாதுகாப்பதில் மிக உறுதியாக உள்ளார்கள். பொதுமக்கள் அனைவரும் கொரோனா தொற்றின் 3வது அலையில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்வதற்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.
மாஸ்க் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கைகளை கழுவ வேண்டும். சாணிடைசர் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் கொரோனாவின் 3வது தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள வேண்டும். தமிழக அரசுக்கு போதிய ஒத்துழைப்பு அளித்து கொரோனா 3வது அலை தமிழகத்திற்கு வராமல் தடுக்க வேண்டும். தமிழகத்தை வளர்ச்சி பாதையில் எடுத்து செல்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசுக்கு பொதுமக்கள் தேவையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன், மகளிர் திட்ட திட்ட அலுவலர் பிச்சை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வேளாண்மை (பொ) பழனி வேலாயுதம், மாவட்ட வழங்கல் அலுவலர் அபுல் காசிம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலர் பிரமநாயகம், முக்கிய பிரமுகர் ஆனந்தசேகரன், வட்டாட்சியர் ஜஸ்டின், வட்ட வழங்கல் அலுவலர் வனதாள், குடிசை மாற்று வாரிய உதவி நிர்வாக பொறியாளர் ராஜா கொம்பையா பாண்டியன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

