தூத்துக்குடி மாவட்டத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் 311வது பிறந்த தினத்தை முன்னிட்டு கட்டாரங்குளத்தில் நாளை நடைபெற உள்ள ஜெயந்தி விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கொரோனா தொற்று பரவல் தடுப்பு காரணமாக மாநிலம் முழுவதும் 144 குற்ற விசாரணை நடைமுறைச் சட்டப்படியான தடை உத்தரவு அமலில் உள்ளதால் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கட்டாரங்குளத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் 311வது பிறந்த நாளை முன்னிட்டு வரும் 11.07.2021 அன்று நடைபெற உள்ள ஜெயந்தி விழாவிற்கு அரசு சார்பில் மட்டுமே மரியாதை செலுத்தப்படும். பொதுமக்கள் சார்பில் செலுத்துவதற்கோ, ஊர்வலங்களுக்கோ மற்றும் இரு சக்கர வாகனங்களில் பேரணி செல்வதற்கோ முற்றிலும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
வீரன் அழகுமுத்துக்கோன் ஜெயந்தி விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நாலாட்டின்புதூர் சமுதாய நலக்கூடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . எஸ். ஜெயக்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த பாதுகாப்பு பணியில் 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 9 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 35 காவல் ஆய்வாளர்கள் உட்பட 650 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றத் தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் . கோபி, தலைமையிட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன், காவல் துணை கண்காணிப்பாளர்கள் கோவில்பட்டி உதயசூரியன், தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு ஜெயராம், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு பாலாஜி, நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு முருகவேல், மணியாச்சி . சங்கர், ஆயுதப்படை கண்ணபிரான் உட்பட காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

