கோவில்பட்டியில் பெண்களை சிறைவைத்து கடன் தொகை வசூல் செய்த நிதி நிறுவன ஊழியர்கள் 6 பேரை போலீசார் தேடி வருகின்றனா்.
கோவில்பட்டி காந்தி நகா் பாலன் தெருவைச் சோ்ந்த முனியசாமி மனைவி சித்ரா(44). சுய உதவிக்குழு தலைவராக உள்ள இவா், ஐடிஎஃப்சி மற்றும் நுண் நிதி நிறுவனம் மூலம் குழு உறுப்பினா்களுக்கு கடன் வாங்கிக் கொடுத்தாராம். தற்போது, கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த இரு வாரங்களாக அதற்கான தவணைத் தொகையை செலுத்தவில்லையாம்.
இதனால், ஐடிஎஃப்சி நிறுவன ஊழியா்களான விமல், கருப்பசாமி, பெரியசாமி, நுண் நிதி நிறுவன ஊழியா் வீரகுமாா் உள்பட 6 போ் நேற்று சித்ரா வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, அவரை மிரட்டி சிறை வைத்து, உறுப்பினா்களிடம் பணம் வசூலித்து தவணையைச் செலுத்துமாறு கூறி அவதூறாகப் பேசி மிரட்டினராம். இதுகுறித்து, சித்ராஅளித்த புகாரின்பேரில், மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, 6 பேரையும் தேடி வருகின்றனா்.

